மனித செயற்பாடுகளால் மற்றுமொரு சிறுத்தை உயிரிழப்பு

மனித செயற்பாடுகளால் மற்றுமொரு சிறுத்தை உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

02 Jun, 2020 | 5:37 pm

Colombo (News 1st) உயிரிழந்த சிறுத்தை ஒன்றின் உடல் நெலுவ – ஹத்பிட்டிய பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

சிறுத்தையின் கழுத்துப் பகுதியில் காயமொன்றை அவதானிக்க முடிந்ததாக வன ஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று காலை குறித்த சிறுத்தையின் உடல் மீட்கப்பட்டது.

கருஞ்சிறுத்தையைப் போன்றே இந்த சிறுத்தையும் மனித செயற்பாடுகள் காரணமாகவே உயிரிழந்துள்ளது.

வன ஜீவராசிகள் திணைக்களத்தின் புள்ளிவிபரங்களுக்கு அமைய, இலங்கைக்கு உரித்தான அரிய வகை சிறுத்தையொன்றே உயிரிழந்துள்ளது.

தெல்லவ சரணாலயத்திற்கு அருகில் அதிக துர்நாற்றம் வீசியதை அடுத்து, பிரதேசவாசிகள் அது தொடர்பில் ஆராய்ந்தபோதே, சிறுத்தையின் உடலைக் கண்டுபிடித்துள்ளனர்.

எட்டு நாட்களுக்கு முன்னரே இந்த சிறுத்தை உயிரிழந்திருக்கலாம் என அனுமானிக்கப்பட்டுள்ளது.

8 வயதான, ஆறு அடி நீளமான ஆண் சிறுத்தையொன்றே உயிரிழந்த நிலையில் மீடக்கப்பட்டுள்ளதாக வன ஜீவராசிகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

காலியில் இவ்வாறான சிறுத்தையொன்று கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவென, சிறுத்தையின் உடலை சோதனையிட்ட வன ஜீவராசிகள் அதிகாரிகள் கூறினர்.

சிறுத்தை உயிரிழந்தமை தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன், மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பொறியில் சிக்கி நான்கு சிறுத்தைகள் உயிரிழந்துள்ளன.

ஹட்டன் – லக்ஷபான வாழைமலையில் பொறியில் சிக்கி மீட்கப்பட்ட கருஞ்சிறுத்தையொன்று அண்மையில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்