ஜோர்ஜ் ஃப்லொய்ட் கொலை: போராட்டங்கள் உக்கிரம்

ஜோர்ஜ் ஃப்லொய்ட் கொலை: போராட்டங்கள் உக்கிரம், இயல்பு வாழ்க்கை பாதிப்பு

by Staff Writer 02-06-2020 | 10:36 PM
அமெரிக்காவில் ஜோர்ஜ் ஃப்லொய்ட் (George Floyd) எனும் கறுப்பினத்தவர் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் மேற்கொண்ட வன்முறையின் போது ஒக்லண்டிலுள்ள வாகன விற்பனை நிலையமொன்று அழிக்கப்பட்டுள்ளது. மேன்ஹெடின் உள்ளிட்ட பல பகுதிகளில் வர்த்தக நிலையங்களை வழிமறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆளுநர்களுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். எதிர்ப்புகள் தொடர்பில் ஆளுநர்கள் பலவீனமான முறையில் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அதனைவிட வலிமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் நோக்கில் இராணுவத்தினரை ஈடுபடுத்தவுள்ளதாக ஜனாதிபதி அறிவிப்பதற்கு முன்னரே பென்டகனுக்குள் அமைதியின்மை ஏற்பட்டிருந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஆயுதம் தாங்கிய ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்களைக் களம் இறக்குவதாகத் தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி, அதனை அடுத்து பரிசுத்த வேதாகமத்துடன் தேவாலயமொன்றுக்கு சென்றார். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள வொஷிங்டன் தேவாலயத்தைக் கண்காணிக்கும் பிஷப் மேரியன் எட்கர் பட், ஜனாதிபதியின் செயற்பாட்டால் தாம் கோபமடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அரசியல் அறிவிப்பின் பொருட்டு பரிசுத்த வேதாகமத்தை பயன்படுத்தியமை தொடர்பாக தனது வருத்தத்தை அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, தற்போதைய சூழலில் ஜனாதிபதியால் நன்மை பயக்கும் எதனையும் கூற முடியாது போனால் வாயை மூடிக்கொள்ளுமாறு ஹூஸ்டன் பொலிஸ் திணைக்களத் தலைவர் தெரித்துள்ளார். தற்போதைய நிலைமை தொடர்பாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா ட்விட்டர் தகவல்கள் பலவற்றை விடுத்துள்ளார். பல தசாப்தங்களாக பொலிஸ் வன்முறைகளைத் தடுக்காததன் விரக்தியால் ஏற்பட்டவை என அவற்றில் ஒரு தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 டொலர் போலி நாணயத்தாளொன்று வழங்கப்பட்டமை தொடர்பாக களஞ்சியசாலை ஊழியர் ஒருவர் பொலிஸாருக்கு செய்த முறைப்பாட்டை அடுத்து, ஜோர்ஜ் ஃப்லொய்ட் கைது செய்யப்பட்டு, அவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார். ஜோர்ஜ் ஃப்லொய்ட் கைது செய்யப்பட்ட தருணத்தில் தன்னால் மூச்சுவிட முடியவில்லை என அவர் தெரிவித்ததே ஐக்கிய அமெரிக்காவில் இத்தகையதொரு போராட்டம் வெடிப்பதற்கான காரணமாகும். பொலிஸ் அதிகாரியான டெரிக் ஷோவினால் ஜோர்ஜ் ஃப்லொய்ட் கைது செய்யப்பட்ட போது அவர் முழந்தாளிட்டு கீழே வீழ்ந்து கிடக்கும் காட்சி வெளியாகியிருந்தது. டெரிக் ஷோவின் என்பவர் மின்னபொலி பொலிஸ் திணைக்களத்தில் 18 வருடங்களுக்கு மேல் சேவையாற்றியுள்ளார். இந்த சம்பவத்துக்கு முன்னர் அவருக்கு எதிராக அந்த திணைக்களத்தில் 18 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அந்தக் குச்சாட்டுகளின் பிரகாரம் அவருக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. உயிரிழந்த ஜோர்ஜ் ஃப்லொய்டின் சகோதரரான டெரன்ஸ் ஃப்லொய்ட் அமெரிக்காவில் தற்போது இடம்பெற்று வரும் வன்முறைகள் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ளார். அழிவின் மூலம் தமது சகோதரனை மீளப்பெற முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வன்முறைச் செயற்பாடுகளில் ஈடுபடாமல் மக்களின் அதிகாரத்தை வாக்களிப்பு நிலையங்களில் பயன்படுத்துமாறு போராட்டக்காரர்களிடம் டெரன்ஸ் ஃப்லொய்ட் கோரிக்கை விடுத்துள்ளார்.