by Staff Writer 02-06-2020 | 8:51 PM
Colombo (News 1st) இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சுமார் 3 மாதங்களின் பின்னர் இன்று களப்பயிற்சிகளில் ஈடுபட்டனர்.
சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி இந்தப் பயிற்சி முகாம் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்தது.
கொரோனா அச்சத்தினால் முழு உலகமும் முடங்கியிருக்க, கிரிக்கெட் வீரர்களும் களப்பயிற்சியின்றி விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டிருந்தனர்.
முடக்க நிலைமையின் பின்னர் நிபந்தனைகளுடன் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பயிற்சிகளை ஆரம்பிக்க விளையாட்டுத்துறை அமைச்சு அனுமதி அளித்தது.
அதற்கமைய, நேற்று உடற்பயிற்சிகளை ஆரம்பித்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள் கொழும்பு கிரிக்கெட் கழக மைதானத்தில் இன்று களப்பயிற்சிகளில் ஈடுபட்டனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுநர் மிக்கி ஆதர் உள்ளிட்ட நான்கு பயிற்சியாளர்களின் கண்காணிப்பில் இந்தப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
இலங்கை அணித்தலைவரான திமுத் கருணாரத்ன உட்பட 13 வீரர்கள் இந்தக் குழாத்தில் இடம்பெற்றுள்ளனர்.
இந்தக் குழாம் 12 நாட்களுக்கு தொடர்ச்சியாக ஓரிடத்தில் தங்கியிருந்து பயிற்சிகளை தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.