55ஆவது பதவி நிலை தலைமை அதிகாரி பொறுப்பேற்பு

இலங்கை இராணுவத்தின் 55 ஆவது பதவி நிலை தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன பொறுப்பேற்பு

by Staff Writer 02-06-2020 | 9:43 PM
Colombo (News 1st) இலங்கை இராணுவத்தின் 55 ஆவது பதவி நிலை தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன இராணுவ தலைமையகத்தில் இன்று கடமைகளைப் பொறுப்பேற்றார். அவர் கொழும்பு டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரியின் நன்மதிப்புமிக்க பழைய மாணவராவார். பாடசாலை பருவத்தில் ஹொக்கி, ரகர், கால்பந்தாட்டம் உள்ளிட்ட விளையாட்டுக்களில் திறமையை வெளிப்படுத்தியுள்ள ஜகத் குணவர்தன பாடசாலையின் மாணவத் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். அவர் 1985 இலக்கம் 20 பாடநெறியின் கீழ் தியத்தலாவ இராணுவ முகாம் ஊடாக இலங்கை இராணவத்தில் இணைந்தார். 1986 மே 31 ஆம் திகதி ஜகத் குணவர்தன அதிகாரியாக உயர்வு பெற்றார். திறமை வாய்ந்த அதிகாரியாக பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ள அவர் வன்னி பாதுகாப்பு தலைமையத்தின் வவுனியா கட்டளைத்தளபதியாகவும் கடமையாற்றியுள்ளார். அவர் 57 ஆவது படையணியின் சேனாதிபதியாக செயற்பட்ட அதிகாரியாவார். இதேவேளை, இராணுவத்தின் பிரதி பதவி நிலை தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ரசிக பெர்னாண்டோ இன்று பொறுப்பேற்றார். அவர் இதற்கு முன்னர் கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதியாக கடமையாற்றினார். இதேவேளை, கொஸ்கம சீதாவக்க பகுதியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையணியின் 42 ஆவது படை நிறைவேற்றதிகாரியாக மேஜர் ஜெனரல் D.S.பன்சஜயா கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.