யாழ் நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 39 ஆண்டுகள்

யாழ் நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் பூர்த்தியாகும் 39 ஆண்டுகள்

by Fazlullah Mubarak 01-06-2020 | 10:28 AM

தமிழ் மண்ணின் அடையாளமாக அறிவு மணம் பரப்பிய யாழ் நூலகத்திலிருந்து, அதன் உயிராகவிருந்த நூல்களின் எரிந்து கருகிய வாசனை காற்றில் கலந்து இன்றுடன் 39 ஆண்டுகள் கடக்கின்றன.

97 ஆயிரத்துக்கும் அதிகமான நூல்களைத் தன்னகத்தே கொண்டு, தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றாகத் திகழ்ந்த யாழ் நூலகத்தின் இதயத்துடிப்பு 1981 ஆம் ஆண்டு இதேநேரத்தில் அடங்கிப்போனது. தமிழினத்தின் அடையாளமாக, வரலாற்றுச்சின்னமாக, பழம்பெரும் சொத்துக்களான மீளக்கிடைக்காத பல நூல்களையும், சுவடிகளையும் தன்னகத்தே கொண்டிருந்த யாழ் நூலகம் கயவர்களின் வெந்தீயில் வேள்வியானது இதே நாளிலேயே... யாழ் நகரின் மத்தியில் மிடுக்காக எழுந்துநின்று, அனைவருக்கும் அறிவொழியேற்றிய நல்லாசான் அக்கினியால் அழிந்துபோன ஆற்றமுடியா துயரத்திற்கு இன்றுடன் 39 ஆண்டுகள்... ஆண்டுகள் பலவானாலும், ஆறாத ரணங்கள், நெஞ்சைக் குடைவதற்கு யாழ் நூலகத்தின் மீது மக்கள் கொண்டிருந்த மாறாத நேயமே காரணமாகும்... 1933 ஆம் ஆண்டிலிருந்து கட்டியெழுப்பப்பட்டுவந்த யாழ் நூலகம், சிலரது தனிப்பட்ட சேகரிப்புக்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. அதன்பின்னர் பலபாகங்களிலிருந்தும், பல்வேறு தரப்பினரால் சேகரிக்கப்பட்ட நூல்களும், நூற்றாண்டுகள் பழமையான ஓலைச்சுவடிகளும், 1800 ஆம் ஆண்டுகளில் யாழில் வௌிவந்த பத்திரிகைகளின் மூலப்பிரதிகளும் இந்த நூலகத்தில் சேர்க்கப்பட்டன. 1959 ஆம் ஆண்டு யாழ் நூலகம் திறந்து வைக்கப்பட்டது. இந்தநிலையில் 1981 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆந்திகதி இரவு நூலகம் எரியூட்டப்பட்டபோது, 97 ஆயிரத்துக்கும் அதிகமான பெறுமதியான நூல்களும், ஆவணங்களும் அதிலிருந்தன. யாழ்நூலகம் எரியூட்டப்பட்டதைக் கேள்வியுற்றபோது, பத்திரிசியார் கல்லூரியிலிருந்த அருட்தந்தை லோங், அவ்வேளையிலேயே உயிர்மாய்த்தார்.