இன்று மாதவனின் 50ஆவது பிறந்தநாள் – வெற்றி நடைக்கு வாழ்த்துக்கள்

இன்று மாதவனின் 50ஆவது பிறந்தநாள் – வெற்றி நடைக்கு வாழ்த்துக்கள்

இன்று மாதவனின் 50ஆவது பிறந்தநாள் – வெற்றி நடைக்கு வாழ்த்துக்கள்

எழுத்தாளர் Fazlullah Mubarak

01 Jun, 2020 | 1:07 pm

இன்று மாதவனின் 50ஆவது பிறந்தநாள்.

20 வருடங்களை தாண்டிய அவரது சினிமா பயணம் மக்களின் மனங்களில் இன்றும் ஆழப் பதிந்திருக்கின்றது. அவர் தோன்றும் காட்சிகள் கண்ணிமைக்கும் போது மனதில் வட்டமிடுகின்றது. இதுவே நேயர்களை வெற்றிகொண்ட மாதவனின் மிகப் பெரிய சாதனை எனலாம்.

சொக்லேட் போய் ரோல்களில் தனது நடிப்பால் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் மாதவன். தமிழ் சினிமா மட்டுமன்றி ஹிந்தி, தெலுங்கு என ஏனைய சினிமா துறைகளிலும் அவருக்கு ரசிகர்கள் ஏராளம்.

இன்று மாதவனுக்கு 50ஆவது பிறந்தநாள். அதற்காக ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

”அலைபாயுதே” படம் மூலமாக தமிழில் ஹீரோவாக அறிமுகமானவர் மாதவன்.

மணிரத்னம் இயக்கத்தில் உருவான இந்த படம் ஏப்ரல் 14ம் திகதி (2000) வௌியானது. இந்த படம் வந்து 20 வருடங்கள் பூர்த்தியானதை சமீபத்தில் ரசிகர்கள் கொண்டாடிய நிலையில் அந்த படத்தில் நடித்தது பற்றி மாதவன் திருப்தியுடன் பேசியிருந்தார். அலைபாயுதே படத்தில் தான் சினிமாவில் பல நுணுக்கங்களை கற்றுக்கொண்டதாக மாதவன் தெரிவித்திருந்தார்.

படத்தில் வரும் ரயில் நிலைய காதல் காட்சி தற்போதும் அதிகம் பேசப்படும் ஒன்று. அதில் ஷாலினி அஜித்தை நினைத்தும் மாதவன் அவரது மனைவி சரிதாவை நினைத்தும் நடித்தார்களாம். அதனால் தான் அந்த காட்சி உண்மையாக இருந்ததற்கு காரணம் என மாதவன் நேர்காணலொன்றில் கூறியிருந்தார்.

அதற்கு பிறகு ”என்னவளே” என்ற படத்தில் நடித்தார் மாதவன். அதன் பின் அவரது நடிப்பில் 2001இல் வெளிவந்த ”மின்னலே” படம் பெரிய அளவில் பேசப்பட்டது. தற்போது முன்னணி இயக்குநராக தமிழ் சினிமாவில் வலம்வரும் கௌதம் மேனன் இந்த படத்தின் மூலமாகத்தான் இயக்குநராக அறிமுகமானார்.

இந்த படத்தின் கதையை கெளதம் மேனன் மாதவனிடம் கூறிய போது அவருக்கு அது அதிகம் பிடித்துவிட்டது. ஆனால் அந்த கதையை பல தயாரிப்பாளர்கள் கேட்டுவிட்டு அதை தயாரிக்க தயங்கினார்கள் என்று கூறப்படுகின்றது. ஆனாலும் அதில் நடித்தே ஆக வேண்டும் என உறுதியாக இருந்தார் மாதவன். அதன் பிறகு ஒரு தயாரிப்பாளர் ஒப்புக்கொண்டார். ஹரிஷ் ஜெயராஜ் இதற்கு இசையமைத்தார். பாடல்கள் மற்றும் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதன் பிறகு அதே கூட்டணியில் மின்னலே படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்தனர். ”Rehnaa Hai Terre Dil Mein” என்ற அந்த படத்தை கெளதம் மேனன் இயக்கி இருந்தார். ஆனால் பொக்ஸ் ஒபிசில் அதற்கு வரவேற்பு அதிகம் கிடைக்கவில்லை.

அதன் பின் லிங்குசாமி இயக்கத்தில் மாதவன் நடித்த ”ரன்” படம் மூலமாக ஆக்ஷன் படங்களில் நடிக்க தொடங்கினார் மாதவன். அதுவரை சொக்லெட் போய் ரோல்களில் மட்டுமே நடித்து வந்த அவருக்கு இந்த அனுபவம் சற்று வித்தியாசமாக இருந்திருக்கும்.

கதை சொல்லும் போது ரன் படத்தில் வரும் ஷட்டர் காட்சியை பற்றி லிங்குசாமி சொன்ன பிறகு அதில் நடிக்க ஒப்புக்கொண்டாராம் மாதவன். காரணம் ஆக்ஷன் நடிகராக களமிறங்க இது சரியான கதை என அவர் நம்பினார். ரன் படமும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதன் பின் பிரியமான தோழி, ஜேஜே, ஆயுத எழுத்து போன்ற படங்களில் நடித்த பிறகு படிப்படியாக ஹிந்தி சினிமாவில் கால் பதிக்க துவங்கினார் மாதவன்.

சில வருடங்கள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவுக்கு திரும்பிய அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் ”இறுதிச்சுற்று” படத்தில் நடித்தார். மாதவனா இது?, என இரசிகர்கள் வியக்குமளவுக்கு இந்த படத்தில் அவரது தோற்றம் இருந்தது. சற்று அதிக முடி, தாடி என வித்தியாசமான தோற்றத்தில் மிரட்டினார் அவர். அந்த படமும் பெரிய அளவில் ஹிட் ஆனது.

அதன் பின் மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட படம் ”விக்ரம் வேதா”. அதில் மாதவன் பொலிஸ் அதிகாரியாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும் இந்த திரில்லர் படத்தில் நடித்திருந்தனர். தமிழ் சினிமா இரசிகர்கள் இதுவரை பார்த்திராத ஒரு விதத்தில் படம் இருந்ததால் அது பெரிய ஹிட் ஆனது.

அடுத்து தற்போது மாதவன் நடிப்பில் ”நிசப்தம்”, மாறா, ராக்கெட்ரி ஆகிய படங்கள் தமிழில் ரிலீஸ் ஆக தயாராகி வருகின்றன. 20 வருடங்களை கடந்த மாதவனின் சினிமா வெற்றி பயணம் தொடரும்.

அதற்கு நமது மனமுவந்த வாழ்த்துக்கள்!


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்