அமெரிக்க மாநிலங்கள் சிலவற்றில் ஊரடங்கு அமுல்

அமெரிக்க மாநிலங்கள் சிலவற்றில் ஊரடங்கு அமுல்

by Staff Writer 31-05-2020 | 12:37 PM
Colombo (News 1st) அமெரிக்காவில் கறுப்பின பிரஜையொருவர் கொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களை கருத்திற்கொண்டு பிரதான நகரங்கள் பலவற்றில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியா, கொலராடோ, புளோரிடா, இலினொய், மினிசொட்டா, டெனசீ, வொஷிங்டன், யுட்டா, பென்சில்வேனியா உள்ளிட்ட 16 பிராந்தியங்ளைச் சேர்ந்த 25 நகரங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. லொஸ் ஏஞ்சலீஸ், சிக்காகோ, மயேம் நகரங்களில் அமைதியாகத் தொடங்கிய போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. வெள்ளை மாளிகையின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு வொஷிங்டனில் தேசிய பாதுகாப்பு படையினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், பிலடெல்பியாவில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. கறுப்பின அமெரிக்கப் பிரஜையொருவர், பொலிஸ் அதிகாரிகளின் தடுப்புக்காவலில் உயிரிழந்தமைக்கு நீதி கோரியே அமெரிக்காவின் பல இடங்களிலும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது. கடந்த 27 ஆம் திகதி பொலிஸ் அதிகாரி ஒருவரின் முழங்காலில் கழுத்து நெரிக்கப்பட்டு 46 வயதான George Floyd கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.