த.தே.கூ பங்காளிக் கட்சித் தலைவர்கள் சந்திப்பு

த.தே.கூ பங்காளிக் கட்சித் தலைவர்கள் சந்திப்பு: தேர்தல் விஞ்ஞாபன தயாரிப்பு உள்ளிட்ட விடயங்கள் ஆராய்வு

by Staff Writer 30-05-2020 | 8:21 PM
Colombo (News 1st) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களுக்கிடையிலான கூட்டத்தில் எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபன தயாரிப்பு உள்ளிட்ட விடயங்கள் ஆராயப்பட்டதாக கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான கூட்டம் கொழும்பிலுள்ள இரா.சம்பந்தனின் இல்லத்தில் கடந்த இரு நாட்களாக நடைபெற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நேற்று முன்தினம் (28) நடைபெற்ற கூட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனதிராசா, PLOTE-இன் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், TELO-வின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். எனினும், உடல் நலக்குறைவு காரணமாக நேற்றைய கூட்டத்தில் தான் பங்கேற்கவில்லை என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். பங்காளிக்கட்சிகளின் நேற்றைய கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கலந்துகொண்டிருந்தார். இதன்போது, சமகால அரசியல் நிலவரங்கள், அரசியல் தீர்வினை முன்நகர்த்தல், அரசியல் கைதிகளின் விடுவிப்பு, காணி விடுவிப்பு ஆகிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இதேவேளை, எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தினை தயாரித்தல் தொடர்பாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.