Colombo (News 1st) பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கண்டி மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரர் திப்பெட்டுவாவே ஶ்ரீ சுமங்கல தேரரை சந்தித்து இன்று ஆசிபெற்றார்.
பிரதமர் ஶ்ரீ தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.
இதன்போது, தேர்தல் தொடர்பில் ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். தேர்தலுக்காக வாக்குச்சீட்டுகள் அச்சிடப்படுவது குறித்து கேட்டபோது, தேர்தலை நடத்துவது தேர்தல்கள் ஆணைக்குழுவின் பொறுப்பு, வழக்கின் தீர்ப்பு வௌியான பின்னர் அவர்கள் தேர்தலுக்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள், என குறிப்பிட்டார்.
தேர்தலுக்கு உகந்த காலம் இதுவல்ல என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்து வருவது தொடர்பில் வினவப்பட்டது.
எனக்கு அது ஏன் என்று தெரியவில்லை. நாங்கள் எதிர்க்கட்சியில் இருக்கும்பொழுது அரசாங்கத்தை கவிழ்ப்பதே எமது தேவையாகவிருந்தது. அதனால் நாங்கள் தேர்தலைக் கோரினோம். விரைவில் தேர்தலைக் கோருவதே எமது பொறுப்பு. அரசாங்கமே தேர்தலை பிற்போட முயற்சிக்கும். ஆனால், அது இன்று மாறியுள்ளது. தேர்தலை நடத்த வேண்டும் என அரசாங்கம் கூறுகின்றது. எதிர்க்கட்சி தேர்தலை வேண்டாம் என கோருகின்றது. இதற்கான காரணம் என்னவென மக்கள் அறிந்துகொள்ள வேண்டும்
என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதிலளித்தார்.
இதனையடுத்து, ஜூன் மாதம் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுமா என கேட்டபோது, வழங்க வேண்டாம் என தேர்தல்கள் ஆணைக்குழுவினர் கூறியதாகவும் அது தொடர்பான எழுத்து மூலமான கடிதம் தன்னிடம் இருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
இதனையடுத்து, பிரதமர் மல்வத்து மகாநாயக்க தேரரை சந்தித்து ஆசி பெற்றார்.
மல்வத்து பீடத்தின் மாகநாயக்க தேரர் திப்பெட்டுவாவே ஶ்ரீசுமங்கல தேரருக்கு இன்று 77ஆவது பிறந்த தினமாகும்.
இதனையடுத்து , பிரதமர் மல்வத்து பீடத்தின் உபநாயக்க திம்புல்கும்புரே விமலதர்ம தேரரை சந்தித்து ஆசி பெற்றார்.