கருஞ்சிறுத்தையின் மரணத்திற்கான காரணம் என்ன?

by Staff Writer 30-05-2020 | 9:18 PM
Colombo (News 1st) நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்த கருஞ்சிறுத்தையின் மரணத்திற்கான சரியான காரணம் என்னவென்பதே நாட்டிலுள்ள மக்கள் அனைவரதும் கேள்வியாகும். கடந்த 27 ஆம் திகதி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் பொறியிலிருந்து மீட்கப்பட்ட கருஞ்சிறுத்தைக்கு உடவளவவில் சிகிச்சையளிக்கப்பட்டது. கால்நடை வைத்தியர்களின் விசேட கண்காணிப்பின் கீழ் கடந்த சில நாட்களாக கருஞ்சிறுத்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் நேற்று முற்பகல் 10.40 அளவில் அது உயிரிழந்தது. கறுஞ்சிறுத்தையின் மரணத்துக்கான காரணத்தை கண்டறிவதற்கான பரிசோதனைகளை நடத்தும் பொறுப்பு பேராதனை பல்கலைக்கழத்தின் கால்நடை வைத்திய பீடத்திடம் ஒப்படைக்கப்பட்டது. கருஞ்சிறுத்தையின் நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், அதன் சுவாசப்பை மற்றும் நாளங்களுக்கிடையிலான உறுப்புகளும் பாதிக்கப்பட்டமையே மரணத்திற்கான காரணமென பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. இதேவேளை, யட்டியாந்தோட்டை சீ பொத் பகுதியில் வீடொன்றுக்கு பின்னால் சிறுத்தையொன்று நேற்று பொறியில் சிக்கியது. பொறியில் சிக்கிய சிறுத்தை தேயிலை செடிகளுக்குள் முடங்கிக் கிடந்தது. யட்டியாந்தோட்டை வனஜீவராசிகள் அதிகாரிகள் அவ்விடத்திற்கு சென்று சிறுத்தையை காப்பாற்றும் முயற்சிகளை முன்னெடுத்தனர். சிறுத்தையை பாதுகாப்பாக வெளியில் கொண்டுவந்து, யட்டியாந்தோட்டையிலுள்ள பாதுகாப்பான காட்டிற்குள் விடுவிக்க நடவடிக்கை எடுத்ததாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் சுகாதார பணிப்பாளர் டொக்டர் தாரக பிரசாத் தெரிவித்தார்.