அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு வேவெண்டன் இல்லத்தில் அஞ்சலி: நாளை இறுதிக்கிரியைகள்

by Staff Writer 30-05-2020 | 8:55 PM
Colombo (News 1st) அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் வேவெண்டன் இல்லத்திலிருந்து கொட்டகலை CLF வளாகத்திற்கு இன்று கொண்டு செல்லப்பட்டது. அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் இன்று காலை வரை ரம்பொடை வேவெண்டன் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு அன்னாரின் இல்லத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற்றன. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட பலர் அன்னாருக்கு இன்று அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து, அன்னாரின் பூதவுடல் வேவெண்டன் இல்லத்திலிருந்து கொட்டகலை நோக்கி எடுத்துச்செல்லப்பட்டது. லபுக்கலை, நுவரெலியா, நானுஓயா, லிந்துலை, தலவாக்கலை ஊடாக பூதவுடல் கொண்டு செல்லப்பட்டது. வீதியின் இருமருங்கிலும் கூடியிருந்த தோட்டத்தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அன்னாருக்கு அஞ்சலி செலுத்தினர். அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலைத் தாங்கிய வாகனம் கொட்டகலை CLF வளாகத்தை இன்று மாலை சென்றடைந்தது. நோர்வூட் சௌமியமூர்த்தி தொண்டமான் விளையாட்டரங்கில் நாளை (31) மாலை இறுதிக்கிரியைகள் நடைபெற்று பூதவுடல் தகனம் செய்யப்படவுள்ளது. இந்நிலையில், மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அஞ்சலி செலுத்தும் நினைவேந்தல் நிகழ்வுகள் நாட்டின் பல பகுதிகளில் இன்றும் நடைபெற்றன. யாழ்ப்பாண நண்பர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு யாழ்ப்பாணத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்து குருமார்கள், பௌத்த பிக்குகள் இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். வவுனியா மாவட்ட பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் வவுனியா கூமாங்குளம் பொதுநோக்கு மண்டபத்திலும் அஞ்சலி நிகழ்வொன்று இடம்பெற்றது. முதியோர் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா - மகா இறம்பைக்குளத்திலும் அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அத்துடன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் வவுனியா அலுவலகத்திலும் நினைவேந்தல் நிகழ்வொன்று நடைபெற்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்களால் அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு கிளிநொச்சி- மருதநகர் சந்தியிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. திருகோணமலையிலுள்ள மலையக மக்களின் ஏற்பாட்டில் மாவட்ட பஸ் தரிப்பிடத்தில் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. பொகவந்தலாவை - பெரிய எலிப்படை பகுதியிலும் அஞ்சலி நிகழ்வொன்று இடம்பெற்றது. நாவலப்பிட்டி , எட்டியாந்தோட்டை, தெஹியோவிட்ட, தெரணியகல ஆகிய பகுதிகளிலும் மக்கள் அஞ்சலி செலுத்தினர்.