மொரட்டுவை உணவகத்தில் துப்பாக்கிச்சூடு: பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மூவர் இடைநிறுத்தம்

மொரட்டுவை உணவகத்தில் துப்பாக்கிச்சூடு: பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மூவர் இடைநிறுத்தம்

எழுத்தாளர் Staff Writer

30 May, 2020 | 8:18 pm

Colombo (News 1st) மொரட்டுவை – சொய்சாபுரவில் உணவகமொன்றின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட தருணத்தில் அங்கு பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மூவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னக்கோனின் உத்தரவிற்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சொய்சாபுர பகுதியில் நேற்று (29) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் சந்தேகநபர்களை கைது செய்யத் தவறிய குற்றச்சாட்டில் மூன்று பொலிஸாரும் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த உணவகத்தில் அடையாளம் தெரியாத சிலர் நேற்று துப்பாக்கிச்சூடு நடத்தியிருந்தனர்.

துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட தருணத்தில் அங்கிருந்த மூன்று பொலிஸாரும் கடமை தவறியுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அதற்கமைய, இரத்மலானை பொலிஸ் நிலையத்தின் கீழ் கடமையாற்றும் ஒரு பொலிஸ் சார்ஜண்டும் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவரும் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என்பதுடன் உணவகத்திற்கும் சேதமேற்பட்டுள்ளது.

இதற்கு முன்னரும் கடந்த 19 ஆம் திகதி அடையாளம் தெரியாத சிலர் இந்த உணவகத்திற்கு வருகை தந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்