வாக்களிப்பு நிலையங்கள் அதிகரிக்கப்பட வேண்டும்

வாக்களிப்பு, வாக்கெண்ணும் நிலையங்கள் அதிகரிக்கப்பட வேண்டும்: தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு

by Bella Dalima 29-05-2020 | 6:22 PM
Colombo (News 1st) தற்போதைய நிலையில் பொதுத்தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கான சுகாதார வழிமுறைகள் தற்போது தயாரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் இணைந்து உருவாக்கப்பட்ட விசேட குழு இந்த வழிமுறைகளைத் தயாரித்து வருகிறது. வாக்களிப்பு மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களை அதிகரிப்பதனூடாக தேவைப்படும் ஆளணி தொடர்பிலும் தற்போது ஆராயப்பட்டு வருகின்றது. இதேவேளை, பொதுத்தேர்தலுக்கு தேவையான வாக்குச்சீட்டுக்களை அச்சிடத் தயாராகவுள்ளதாக அரச அச்சகர் கங்கானி கல்பனி லியனகே தெரிவித்துள்ளார். வேட்பு மனுக்களை கையேற்றதன் பின்னர், தேவையான வாக்குச் சீட்டுக்களை அச்சிடுமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அரச அச்சகத்திற்கு அறிவித்திருந்தது. எனினும், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகள் இடைநிறுத்தப்பட்டதாக அரச அச்சகர் குறிப்பிட்டார். பொதுத்தேர்தலை நடத்துவதற்கான சாத்தியங்கள் ஏற்பட்டவுடன், அந்த பணிகளை மீள ஆரம்பிக்க தயாராகவுள்ளதாக அவர் கூறியுள்ளார். இம்முறை பொதுத்தேர்தலுக்காக 17 மில்லியன் வாக்குச்சீட்டுக்களை அச்சிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.