அமெரிக்காவில் தீவிரமடையும் வன்முறை

பொலிஸாரின் தாக்குதலில் சந்தேகநபர் உயிரிழப்பு: அமெரிக்காவில் தீவிரமடையும் வன்முறை

by Bella Dalima 29-05-2020 | 9:31 PM
Colombo (News 1st) அமெரிக்காவில் பொலிஸாரின் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து 3 ஆவது நாளாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அமெரிக்காவின் மின்னசொட்டா மாநிலத்தில் மின்யாபொலிஸ் பகுதியில் உள்ள பொலிஸ் நிலையம் ஒன்றில் தடுப்புக்காவலில் வைக்கப்படடிருந்த சந்தேகநபர் ஒருவர் கடந்த திங்கட்கிழமை உயிரிழந்தார். 46 வயதான சந்தேகநபரின் கழுத்தை பொலிஸார் ஒருவர் தமது முழங்காலினால் நெரித்ததாகக் கூறப்படுகின்றது. மூச்சுத்திணறிய நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது, வழியில் அவர் உயிரிழந்துள்ளார். மோசடிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட குறித்த சந்தேகநபர் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டிருந்தார். சம்பவம் தொடர்பில் 4 பொலிஸார் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என உயிரிழந்தவரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், பொலிஸ் நிலையம் ஒன்றுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர். வலுப்பெற்றுள்ள போராட்டத்தினால் நூற்றுக்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்கள் சேதமடைந்துள்ளன. இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.