ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து சென்ற 99 பேரின் உறுப்புரிமை இரத்து

by Bella Dalima 29-05-2020 | 8:49 PM
Colombo (News 1st) பிறிதொரு கட்சியை ஊக்குவித்ததாகத் தெரிவித்து 99 பேரை கட்சி உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு தீர்மானித்ததாக அக்கட்சியின் உதவி செயலாளர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார். இதேவேளை, செயற்குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்கள் கூடி தலைவர் உட்பட சிலருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவர தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார கூறினார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் செயற்குழு உறுப்பினர்கள் சிலர் இன்று முற்பகல் கூடியுள்ளனர். அந்த செயற்குழுக் கூட்டத்தில் 29 உறுப்பினர்கள் வரை பங்கேற்றதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார். புதிதாக நியமிக்கப்பட்ட 8 பேரும் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான இன்றைய செயற்குழு கூட்டத்தில் பங்குபற்றியுள்ளனர். சந்தீப் சமரசிங்க, பாலித தெவரப்பெரும, பேராசிரியர் ஆஷூ மாரசிங்க, ஷாந்தினி கோன்கஹாகே, நாலக கொலன்னே, சானக்க இலெபெரும, அஸ்மீர தாசிம், கஸ்தூரி அனுராதநாயக்க ஆகியோரே அந்த 8 பேர் ஆவர். இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்கள் 36 பேர் ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் சஜித் பிரேமதாச தலைமையில் ஒன்றுகூடினர். ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டுவர இதன்போது ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்