அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு இறம்பொடையில் பெருந்திரளானோர் அஞ்சலி

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு இறம்பொடையில் பெருந்திரளானோர் அஞ்சலி

எழுத்தாளர் Bella Dalima

29 May, 2020 | 7:43 pm

Colombo (News 1st) அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல்​ இறம்பொடை – வேவெண்டன் இல்லத்திற்கு இன்று கொண்டு செல்லப்பட்டது.

அன்னாரின் பூதவுடல் மக்களின் அஞ்சலிக்காக நாளை (30) காலை வரை வேவெண்டன் இல்லத்தில் வைக்கப்படவுள்ளது.

மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் கொழும்பு சௌமியபவனிலிருந்து காலி முகத்திடலுக்கு இன்று காலை கொண்டு செல்லப்பட்டது.

காலி முகத்திடலிலிருந்து ஹெலிகொப்டர் மூலம் கம்பளைக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

அன்னாரின் பூதவுடலைக் கொண்டு சென்ற ஹெலிகொப்டர் காலை 8 மணியளவில் கம்பளை – வீகுலவத்தை மைதானத்தில் தரையிறக்கப்பட்டது.

கம்பளை வீகுலவத்தை மைதானத்திலும் அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் அன்னாரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அங்கிருந்து பூதவுடலைத் தாங்கிய வாகனத்தொடரணி புசல்லாவை வீதியூடாக, இறம்பொடை- வேவெண்டன் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அன்னாரின் பூதவுடலைத் தாங்கிய வாகனத்தொடரணி சென்ற வீதிகளின் இருமருங்கிலும் பெருந்திரளானவர்கள் அன்னாருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

வேவெண்டன் இல்லத்திலுள்ள அன்னாரது பூதவுடலுக்கு மக்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

வேவெண்டன் இல்லத்திலிருந்து நாளை லபுக்கலை, நுவரெலியா, நானுஓயா, லிந்துலை, தலவாக்கலை ஊடாக கொட்டகலை CLF வளாகத்திற்கு பூதவுடல் கொண்டு செல்லப்படவுள்ளது.

நோர்வூட் சௌமியமூர்த்தி தொண்டமான் விளையாட்டரங்கிற்கு பூதவுடல் எடுத்துச்செல்லப்பட்டு நாளை மறுதினம் (31) மாலை 4 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெறும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்