புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான அறிவிப்பு

புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பில் இந்திய உச்ச நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு

by Bella Dalima 28-05-2020 | 7:18 PM
Colombo (News 1st) இந்தியாவில் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக உச்ச நீதிமன்றத்தால் சில புதிய அறிவிப்புகள் வௌியிடப்பட்டுள்ளன. சொந்த இடங்களுக்கு திரும்பும் முயற்சிகளின் போது, புலம்பெயர் தொழிலாளர்கள் விபத்து உள்ளிட்ட காரணங்களால் உயிரிழத்தல், உணவு, உறைவிடம் என்பன இன்றி தவித்தல் உள்ளிட்ட செய்திகளின் அடிப்படையில் இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. ரயில்கள் மூலம் சொந்த ஊர் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களிடம் பயணக் கட்டணம் அறவிடக்கூடாதெனவும் அந்த கட்டணங்களை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் பகிர்ந்துகொள்ள வேண்டுமெனவும் இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பயணம் தொடங்கும் போது எந்த மாநிலத்தில் பயணம் தொடங்குகிறதோ அந்த மாநில அரசுகள் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதற்கான ரயில் அல்லது பஸ்களுக்காக எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும் என்பதற்கான தகவல்களையும் அவர்கள் சிக்கியுள்ள மாநிலங்களின் அரசுகள் அறிவிக்க வேண்டும் என இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொந்த ஊர் திரும்புவதற்கான முன்பதிவை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மேற்கொள்வது மாத்திரமல்லாமல், அவர்கள் கூடிய விரைவில் போக்குவரத்து வசதிகளைப் பெறுவதையும் அந்தந்த மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும் என இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.