நில்வளா கங்கையின் நீர்மட்டம் அதிகரிப்பு

நில்வளா கங்கையின் நீர்மட்டம் அதிகரிப்பு: அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல் 

by Staff Writer 28-05-2020 | 3:14 PM
Colombo (News 1st) நில்வளா கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையால், வௌ்ளம் தொடர்பில் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது. கங்கையின் நீர்மட்டம் 6 மீட்டராகும் போது வௌ்ளம் ஏற்படும் எனவும், தற்போது 5.81 மீட்டர் வரை நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நில்வளா கங்கைக்கு நீரை வழங்கக்கூடிய பகுதிகளில் 150 மில்லிமீட்டர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுமாறு நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. அக்குரஸ்ஸ , கும்புறுபிட்டிய வீதி மற்றும் அக்குரஸ்ஸ நகரிலுள்ள சப்பாத்து பாலத்திலும் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதேவேளை, தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காரணமாக நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதற்கமைய மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.