தனிமைப்படுத்தல் வசதிகளுக்கு ஏற்பவே வௌிநாடுகளிலிருந்து இலங்கையர்கள் அழைத்து வரப்படுவார்கள்: பந்துல

தனிமைப்படுத்தல் வசதிகளுக்கு ஏற்பவே வௌிநாடுகளிலிருந்து இலங்கையர்கள் அழைத்து வரப்படுவார்கள்: பந்துல

எழுத்தாளர் Bella Dalima

28 May, 2020 | 8:11 pm

Colombo (News 1st) குவைத்தில் இருந்து நாடு திரும்பியவர்களில் அநேகமானவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை, பல்வேறு நாடுகளில் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ள 41ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்களை மீள அழைக்கின்றமை தொடர்பில் தற்போது பிரச்சினைகள் எழுந்துள்ளன.

இந்நிலையில், தனிமைப்படுத்தல் வசதிகளுக்கு ஏற்பவே வௌிநாட்டில் இருந்து இலங்கையர்களை மீள அழைத்து வர முடியும் என அமைச்சரவை இணை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

ஏதேனும் ஒரு நாட்டிலிருந்து இலங்கைக்கு வரும் எண்ணத்தில் இருக்கும் ஒருவர், அங்குள்ள அலுவலகங்கள் ஊடாக வௌிவிவகார அமைச்சிற்கு அறிவிக்க வேண்டும் எனவும் வௌிவிவகார அமைச்சு முக்கியத்துவ அடிப்படையில் பட்டியலிட்டு, சுகாதார அமைச்சுடன் கலந்துரையாடி, தனிமைப்படுத்தலுக்கு உள்ள சந்தர்ப்பத்தை ஆராய்ந்த பின்னரே படிப்படியாக அழைத்து வரும் நடைமுறை செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.

இதேவேளை, சீஷெல்ஸில் இருந்து இலங்கைக்கு 35 பேர் அழைத்துவரப்பட்டமை தொடர்பில் அரசாங்கம் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை அவர் நிராகரித்தார்.

அரசாங்கம் சீஷெல்ஸில் இருந்து எவரையும் அழைத்துவரவில்லை என பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.

”சிகிச்சை பெறவேண்டிய நோயாளர்கள் மற்றும் அவர்களுக்கு உதவுவதற்காக அவர்களது உறவினர்கள் மாத்திரமே வந்துள்ளனர். அவர்களை அவர்களது நாட்டின் விமானமொன்று, எமது நாட்டிற்கு அந்நிய செலாவணியை வழங்கி மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளது. ஆகவே, எம்மீது குற்றம் சுமத்துவதால் அர்த்தம் இல்லை” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

நாட்டிற்கு அந்நிய செலாவணியை எந்த வகையில் எல்லாம் கொண்டுவர முடியும் என்பதை ஆராய வேண்டும் எனவும் அவ்வாறு இல்லாவிட்டால் நாட்டு மக்களுக்கு தேவையான சேவைகளை வழங்குவதற்கு நிதி இல்லாமற்போகும் எனவும் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டினார்.

மே மாதம் 19 ஆம் திகதி வருகை தந்த இலங்கையர்கள் குவைத் அரசாங்கத்தினால் தெரிவு செய்யப்பட்ட கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எனவும் அவர்களது வருகை இலங்கை மீதான குண்டுத்தாக்குதலுக்கு நிகரானது எனவும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மே மாதம் 25 ஆம் திகதி தெரிவித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி கூறியுள்ளார்.

இந்த கூற்று தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி கவலையும் அதிருப்தியும் அடைவதாக தெரிவித்து, சுனில் ஹந்துன்னெத்தி வௌிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

மஹிந்தானந்த அளுத்கமகே முன்வைத்துள்ள பல விடயங்கள் ஆதாரமற்ற பொய்க்குற்றச்சாட்டுகள் என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குவைத்தில் இருந்து வந்த 466 பேரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவர்களில் நால்வர் மாத்திரம் மருத்துவ அறிக்கைகள் அடிப்படையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டதாகவும் அதில் ஒருவருக்கு மாத்திரம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் குவைத்திலுள்ள இலங்கை தூதுவரை மேற்கோள்காட்டி சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.

வௌிநாடுகளில் உள்ள இலங்கையர்களை தாய்நாட்டிற்கு மீள அழைத்து வருவதில் அரசாங்கம் தொடர்ச்சியாக கொண்டிருந்த அசமந்தப்போக்கு இந்த நிலை தீவிரமடைய காரணமாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே, நிர்க்கதியாகியுள்ள இலங்கையர்கள் மீதும் அவர்களை நாட்டிற்கு அழைத்து வந்து அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்த வௌிநாடுகள் மீதும் அவதூறு செய்வதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என அவரது கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு நாடுகளில் நிர்க்கதியாகியுள்ள இலங்கையர்களை அழைத்து வருவதை நிறுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக சுனில் ஹந்துன்னெத்தி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்