ராஜிதவின் பிணை மனு பரிசீலனை தொடர்பிலான தீர்மானம்

ராஜித சேனாரத்னவின் பிணை மனுவை வேறு நீதிமன்றிற்கு மாற்ற தீர்மானம்

by Staff Writer 27-05-2020 | 10:51 AM
Colombo (News 1st) சட்ட மா அதிபர் திணைக்களத்தின் வேண்டுகோளுக்கு இணங்க முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் பிணை மனுவை வேறொரு நீதவான் நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது சர்ச்சைக்குரிய வெள்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் பிணை கோரிக்கை இன்று (27) கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் சந்தேகநபரான ராஜித சேனாரத்ன மன்றில் ஆஜர்ப்படுத்தப்படவில்லை என்பதுடன் அவர் சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா பிணை கோரிக்கையை முன்வைத்தார். இவ் வழக்கில் கடந்த காலத்தில் ஏற்பட்ட நிலைமைகளை கருத்திற்கொண்டு பிணை கோரிக்கை பரிசீலனைக்காக பிறிதொரு நீதிபதியிடம் ஒப்படைக்குமாறு பிரதம நீதவானிடம் முறைப்பாட்டாளர் தரப்பில் ஆஜராகிய பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப்ப பீரிஸ் கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கை தொடர்பில் அதிருப்தி வௌியிட்ட பிரதிவாதி தரப்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா, பிணை கோரிக்கையை பிறிதொரு நீதிபதி ஆராய்வது தொடர்பில் எவ்வித ஆட்சேபனையும் இல்லையென குறிப்பிட்டுள்ளார். சட்ட மா அதிபரின் கோரிக்கை தொடர்பில் தாம் அதிருப்தியடைவதாகவும் சட்டத்தரணி அனில் சில்வா தெரிவித்துள்ளார். ஏனைய வழக்குகளில் சட்ட மா அதிபர் பின்பற்றாத நடைமுறைகளை இந்த வழக்கில் பின்பற்றுவது தொடர்பில் தாம் புதுமையடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதிலளித்த பிரதி சொலிஸிட்டர் ஜெனரல், சுயாதீன தன்மையுடைய நீதிபதியொருவர் முன்னிலையில் இந்த பிணை கோரிக்கை தொடர்பில் பரிசீலிப்பதற்கு தாம் இந்த கோரிக்கையை முன்வைப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார். சுயாதீன தன்மையுடன் முடிவெடுக்கும் திறமை நீதிபதிகளுக்கு இருப்பதாக இதன்போது பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன பகிரங்க மன்றில் தெரிவித்தார். எவ்வாறாயினும், நீதிபதியால் தமக்கு அநீதி இழைக்கப்படும் என ஏதேனுமொரு தரப்பு கருதுமானால் இந்த பிணை கோரிக்கை பிறிதொரு நீதிபதியிடம் முன்வைப்பதற்கு தான் தயாராகவுள்ளதாக தெரிவித்த பிரதம நீதவான், இதற்கமைவாக கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகேவிடம் இந்த வழக்கை மாற்றுவதற்கு தீர்மானித்தார். இதனடிப்படையில், பிணை கோரிக்கையை கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.