வேறொரு கட்சியில் போட்டியிடுவது ஏன்: ஐ.தே.க உறுப்பினர்களிடம் கட்சி வினவல்

வேறொரு கட்சியில் போட்டியிடுவது ஏன்: ஐ.தே.க உறுப்பினர்களிடம் கட்சி வினவல்

எழுத்தாளர் Staff Writer

27 May, 2020 | 9:09 pm

Colombo (News 1st) கட்சியின் அனுமதியின்றி வேறொரு கட்சியின் ஊடாக பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ள ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களிடம் அதற்கான காரணத்தை வினவியுள்ளதாக  ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

கட்சியின் யாப்பிற்கு அமைய, மற்றுமொரு கட்சியின் ஊடாக தேர்தலில் போட்டியிடும் போது, செயற்குழுவின் அனுமதி அவசியம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் சுட்டிக்காட்டினார்.

எனினும், இவர்கள் அவ்வாறான அனுமதியைப் பெறவில்லை என அகில விராஜ் காரியவசம்
தெரிவித்தார்.

கட்சியை நீண்ட காலம் பாதுகாப்பதற்கு, கட்சியின் யாப்பை மீறியுள்ள உறுப்பினர்களுக்கு எதிராக, கட்சித் தலைமைத்துவம் செயற்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் குறிப்பிட்டார்.

எனினும், கட்சியின் யாப்பிற்கு அமைய செயற்குழுவின் தீர்மானத்தையே தாம் நடைமுறைப்படுத்தியதாக ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சட்டத்தரணி சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கி அதன் தலைவராக சஜித் பிரேமதாசவையும் பொதுச் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டாரவையும் நியமித்து பரந்த கூட்டணியின் கீழ் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதே செயற்குழுவின் இறுதி தீர்மானம் எனவும் அந்த தீர்மானத்திற்கு எதிராக ரவி கருணாநாயக்கவும் அகில விராஜ் காரியவசமும் ரணில் விக்ரமசிங்கவும் செயற்பட்டுள்ளதாகவும் சுஜீவ சேனசிங்க கூறினார்.

அவர்களுக்கு எதிராக தாம் ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்க முடியும் என்ற போதும், அதனை மக்களிடம் ஒப்படைப்பதாக அவர் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்