தேர்தல் சட்டங்களை தேர்தல் ஆணைக்குழு மீறியுள்ளதாக அறிவிக்குமாறு விஜேதாச ராஜபக்ச உயர் நீதிமன்றில் கோரிக்கை

தேர்தல் சட்டங்களை தேர்தல் ஆணைக்குழு மீறியுள்ளதாக அறிவிக்குமாறு விஜேதாச ராஜபக்ச உயர் நீதிமன்றில் கோரிக்கை

எழுத்தாளர் Staff Writer

27 May, 2020 | 7:04 pm

Colombo (News 1st) அரசியலமைப்பையும் தேர்தல் சட்டங்களையும் தேர்தல் ஆணைக்குழு மீறியுள்ளதாக அறிவித்து பொருத்தமான உத்தரவை பிறப்பிக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ச உயர் நீதிமன்றில் இன்று கோரிக்கை விடுத்தார்.

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் சமூக பொறுப்பை கவனத்திற்கொள்ளாமல், நீதிமன்றத்தில் எதிர்மறையான கருத்துக்களைக் கூறுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

ஜூன் 20 ஆம் திகதி தேர்தலை நடத்துவது மற்றும் பாராளுமன்றத்தை மீளக்கூட்டுவது உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு இன்று ஏழாவது நாளாகவும் உயர் நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்குடன் தொடர்புடைய இடையீட்டு மனுதாரர்கள் கருத்துக்களை முன்வைக்க இன்று சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசத்தினுடைய இடையீட்டு மனு சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜேதாச ராஜபக்ச உயர் நீதிமன்றில் ஆஜரானார்.

நியாயமான பக்கசார்பற்ற தேர்தலொன்று உரிய காலத்தில் நடத்தப்பட வேண்டும் என்பதற்காக தேர்தல் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டாலும் அதன் உறுப்பினர்களுக்கு இடையில் தற்போது ஏற்பட்டுள்ள முரண்பாடான நிலைமையினால் நீதிமன்றுக்கு வந்து எதிர்மறையான கருத்துக்களை அவர்கள் கூறுவதாக ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ச உயர் நீதிமன்றில் சுட்டிக்காட்டினார்.

இது வெட்கப்பட வேண்டிய நிலைமை என தெரிவித்த ஜனாதிபதி சட்டத்தரணி, ஆணைக்குழுவின் சில உறுப்பினர்கள் தமது பொறுப்பை உணர்ந்துகொள்ளாமல் இருப்பதாகவும் கூறினார்.

இதேவேளை, சிவில் செயற்பாட்டாளர் ஜீவன் தியாகராஜாவின் இடையீட்டு மனு சார்பாக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி உதித்த இஹலஹேவா, பாராளுமன்றத் தேர்தல் சட்டத்தின் கீழ் விதிமுறைகளை விடுப்பதற்கு தேர்தல் ஆணைக்குழுவிற்கு அதிகாரம் உள்ளதென சுட்டிக்காட்டினார்.

அதன் பிரகாரம், பாராளுமன்றத்தைக் கூட்டி தேர்தல் தொடர்பாக புதிய சட்டத்தை இயற்றும் தேவை இல்லை என ஜனாதிபதி சட்டத்தரணி வாதிட்டார்.

உயர் நீதிமன்றத்தின் ஐவர் கொண்ட நீதியரச்கள் குழாம் நாளையும் மனு மீதான பரிசீலனையை எடுத்துக்கொள்ளவுள்ளதுடன், அதன்போது மீண்டும் இடையீட்டு மனுதாரர்களுக்கு அடிப்படை விடயங்களை தெரிவிக்க சந்தர்ப்பம் அளிக்கப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்