ஆறுமுகன் தொண்டமான் மறைவு: தொழிலுக்கு செல்வதைத் தவிர்த்து மலையக மக்கள் அஞ்சலி

ஆறுமுகன் தொண்டமான் மறைவு: தொழிலுக்கு செல்வதைத் தவிர்த்து மலையக மக்கள் அஞ்சலி

எழுத்தாளர் Staff Writer

27 May, 2020 | 6:50 pm

Colombo (News 1st) இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவை அடுத்து, மலையகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தோட்டத்தொழிலாளர்கள் இன்று தொழிலுக்கு செல்வதைத் தவிர்த்து தமது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

மாத்தளையிலுள்ள பல்வேறு தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் இன்று தொழிலுக்கு செல்வதைத் தவிர்த்தனர்.

ஓபல்கல, நடுத்தோட்டம், தங்கத்த, நிக்கலோயா, எலகல்ல, இறப்பர் தோட்டம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இன்று தொழிலுக்குச் செல்லவில்லை.

நடுத்தோட்டத்தில் குழுமிய தோட்டத்தொழிலாளர்கள் மறைந்த ஆறுமுகன் தொண்டமானின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

நுவரெலியா மாவட்டத்தின் டயகம, அக்கரப்பத்தனை, லிந்துலை, தலவாக்கலை, பத்தனை கொட்டகலை, ஹட்டன், பொகவந்தலாவை, மஸ்கெலியா பகுதிகளிலும் தோட்டத்தொழிலாளர்கள் இன்று தொழிலுக்கு செல்லவில்லை.

நகர்ப்பகுதிகளிலும் தோட்டப்புற குடியிருப்புகளிலும் வெள்ளைக்கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன.

புசல்லாவையிலும் பெரும்பாலான தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தொழிலுக்குச் செல்லவில்லை.

ஹட்டன் – பொகவந்தலாவை பிரதான வீதியின் டிக்கோயா தேயிலைத் தொழிற்சாலைக்கு அருகில் கூடாரம் அமைக்கப்பட்டு மறைந்த ஆறுமுகன் தொண்டமானின் உருவப்படம் வைக்கப்பட்டுள்ளது.

புபுரஸ்ஸ மேற்பிரிவு, மணிக்கட்டி, லெவலன் பகுதிகளிலுள்ள வீடுகளில் வௌ்ளைக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளைச் சேர்ந்த தோட்டத்தொழிலாளர்களும் இன்று தொழிலுக்குச் செல்வதைத் தவிர்த்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்