English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
27 May, 2020 | 6:04 pm
Colombo (News 1st) இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மறைந்த தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நோர்வூட்டில் நடைபெறவுள்ளன.
இறுதிக்கிரியைகள் பூரண அரச அனுசரணையில் இடம்பெறும் என பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.
அன்னாரின் பூதவுடல் பத்தரமுல்லையிலுள்ள இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மறைந்த தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் பொரளையிலுள்ள தனியார் மலர் சாலையில் இன்று காலை வைக்கப்பட்டிருந்தது.
பின்னர், காலை 10 மணியளவில் அன்னாரின் பூதவுடல் பத்தரமுல்லையிலுள்ள அன்னாரின் உத்தியோகப்பூர்வ இல்லத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது.
அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பெருமளவிலானோர் அன்னாரின் பூதவுடலுக்கு இன்று காலை முதல் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அமரர் ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடல் நாளை (28) பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அதன் பின்னர் கொழும்பிலுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைமையகமான சௌமியபவனுக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
நாளை மறுதினம் (29), பூதவுடல் ரம்பொடையிலுள்ள அன்னாரின் இல்லத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு, 30 ஆம் திகதி கொட்டகலையில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நோர்வூட் சௌமியமூர்த்தி தொண்டமான் விளையாட்டரங்கில் அன்னாரின் இறுதிக்கிரியைகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தனது 55 ஆவது வயதில் நேற்றிரவு காலமானார்.
சுகயீனம் காரணமாக தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் காலமானார்.
மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவை நேற்று சந்தித்திருந்தார்.
இதன்போது, இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வீடமைப்புத் திட்டம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் முகப்புத்தகத்தில் இறுதியாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன் பின்னரே பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை அவர் சந்தித்திருந்தார்.
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவையொட்டி முக்கிய பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவு தொடர்பில் ஆழ்ந்த கவலையடைவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மலையக மக்களின் உரிமைகளுக்காக அவர் அர்ப்பணிப்புடன் முன்நின்றதாக ஜனாதிபதி விடுத்துள்ள அனுதாப செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மக்கள் நலனுக்காக முன்நின்று செயற்பட்ட தலைவர் எனவும், அவருடைய இழப்பு நாட்டிற்கு ஏற்பட்ட பேரிழப்பு எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவு மலையக மக்களுக்கு மட்டுமன்றி, முழு இலங்கைவாழ் மக்களுக்கும் பாரிய இழப்பு என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சௌமியமூர்த்தி தொண்டமானின் மறைவின் பின்னர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸூக்கு தலைமைத்துவம் வழங்கி, மலையக மக்களின் மனங்களில் நீங்கா இடம்பிடித்த ஒரு தலைவராக ஆறுமுகன் தொண்டமான் திகழ்வதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவு மலையகத்திற்கு பேரிழப்பு என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
அரசியல் ரீதியாக தனக்கும் ஆறுமுகன் தொண்டமானுக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் இருந்த போதிலும், தனிப்பட்ட ரீதியில் எவ்வித கோபதாபங்களும் இருக்கவில்லை எனவும், அவரது மறைவு கவலையளிப்பதாகவும் பழனி திகாம்பரம் தனது அனுதாப செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக தானும், ஆறுமுகன் தொண்டமானும் வெவ்வெறு திசைகளில் பாயும் ஒரே இலக்கைக் கொண்ட நதிகள் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மறைந்த ஆறுமுகன் தொண்டமானுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கொழும்பு மற்றும் மலையகம் எங்கும் வெள்ளை கருப்புக் கொடிகளை பறக்க விடுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சிறுபான்மை சமூகமொன்றின் தலைவராக இருந்த ஆறுமுகன் தொண்டமான் ஏனைய சிறுபான்மை சமூகங்களுக்காகவும் குரல் கொடுத்த ஒரு தலைவர் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.
ஆயிரம் ரூபா சம்பளத்தை வென்றெடுக்கும் அவரது பிரயத்தனங்கள், அன்னாரின் இறுதி மூச்சு அடங்கும் வரை இருந்தமை நேற்று மாலை அவர் பங்கேற்ற பேச்சுவார்த்தைகளின் மூலம் வெளிப்படுவதாக ரிஷாட் பதியுதீன் தனது அனுதாப செய்தியில் கூறியுள்ளார்.
அமைச்சரின் மரணச்செய்தி கேட்டு ஆழ்ந்த கவலையும் துக்கமும் அடைவதாக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.
மலையக மக்களின் அபிவிருத்திக்காக அவர் தொடர்ந்து முன்நின்று செயற்பட்டதாகவும், எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவு மலையக மக்களுக்கு மாத்திரமின்றி ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் பேரிழப்பு என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
எவருக்கும் அஞ்சாமல் தனது கருத்தை துணிச்சலுடன் எடுத்துரைக்கும் ஒரு மிடுக்கான அரசியல் தலைவராக அவர் திகழ்ந்ததாக வீ. ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.
அவரது மறைவு நிச்சயமாக நிரப்பப்பட முடியாத வெற்றிடமாகவே அமையும் என மலையக மக்கள் முன்னணியின் பிரதி பொதுச்செயலாளர் அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவு மலையக மக்களுக்கு பேரிழப்பாகும் என சர்வதேச இந்துமத குரு பீடாதிபதி ஶ்ரீ ஐயப்பதாச குருக்கள் தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானை சந்தித்த நிலையில், அவரது திடீர் மறைவை இன்னமும் நம்ப முடியவில்லை என இலங்கைக்கான இந்தியாவின் உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் துன்பகரமான திடீர் மறைவினால் அதிர்ச்சி அடைவதாகவும் தனது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதாகவும் இந்தியாவின் உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இரங்கல் வௌியிட்டுள்ளார்.
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், உடல்நலக் குறைவால் காலமான செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்ததாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நாட்டு மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவுச்செய்தி தாங்க முடியாத துயரத்தினையும் பேரதிர்ச்சியையும் அளித்துள்ளதாக திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
தங்களின் நலன்களுக்காக காலமெல்லாம் பாடுபட்ட ஒரு இளம் தலைவரை இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் இழந்த சோகத்தில் மூழ்கி தவித்துக் கொண்டிருப்பதாக ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
25 Mar, 2021 | 06:11 PM
09 Sep, 2020 | 06:08 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS