பேராசிரியர் ஹூல் மீதான விமர்சனங்கள் குறித்து மஹிந்த தேசப்பிரிய கருத்து

by Bella Dalima 26-05-2020 | 7:34 PM
Colombo (News 1st) தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடியது. தேர்தலுக்கான முதற்கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் இன்றும் கலந்துரையாடப்பட்டதாக ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கூறினார். தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, உறுப்பினர்களான பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல், ஜனாதிபதி சட்டத்தரணி N.J.அபேசேகர ஆகியோர் இன்றைய கலந்துரையாடலில் பங்கேற்றனர். இந்த கலந்துரையாடலையடுத்து மஹிந்த தேசப்பிரிய பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்
இன்று நாம் தேர்தல் தொடர்பில் ஆணைக்குழுவில் அதிகம் கலந்துரையாடவில்லை. நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்படுகின்ற வழக்கு விசாரணைகள் நிறைவு பெறும் வரை தேர்தலை நடத்துவது தொடர்பில் நாம் தீர்மானிக்க முடியாது. ஆகவே, அந்த சட்ட நடவடிக்கைகள் நிறைவு பெறும் வரை எம்மால் அதற்கான பணிகளை மேற்கொள்ள முடியாது. எனினும், நாம் எமது அலுவலக உத்தியோகத்தர்களால் தயாரிக்கப்பட்டு வருகின்ற வழிகாட்டல்கள் அல்லது வழிகாட்டல் வரைபை மருத்துவ அதிகாரிகள், சுகாதார தரப்பினரின் ஆலோசனைக்கு அமைய தயாரித்து அந்த நடவடிக்கையை தொடருமாறு ஆலோசனை வழங்கினோம்
என குறிப்பிட்டார். இதேவேளை, ஆணைக்குழு உறுப்பினரான பேராசிரியர் இரட்ணஜீவன் ஹூல் தொடர்பில் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மஹிந்த தேசப்பிரிய, அவர் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள விமர்சனங்கள் குறித்து ஆணைக்குழுவிற்கு திருப்தி இல்லை எனவும் தாம் மூவரும் ஒரே விதத்திலேயே செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.