சமூகத்திலிருந்து கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்படாமை நாடு பெற்ற வெற்றி: ஜனாதிபதி செயலணி 

by Staff Writer 26-05-2020 | 4:55 PM
Colombo (News 1st) ஏப்ரல் 30 ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் சமூகத்திலிருந்து கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்படாமை , நாடு பெற்ற வெற்றி என COVID-19 ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி செயலணி இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளது. நாடு வழமைக்கு திரும்புவதன் காரணத்தினால், எதிர்வரும் ஆகஸ்ட் 01 ஆம் திகதி தொடக்கம் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக விமான நிலையங்களை திறப்பது குறித்து COVID-19 ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி, ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்காக நாட்டை திறப்பது தொடர்பில் சர்வதேச மற்றும் உள்நாட்டு சுகாதார துறையினரின் ஆலோசனைகளைப் பெறுவது அவசியம் என ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார். முதலாவது கட்டமாக, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளை உள்ளக பயன்பாட்டிற்காக திறப்பது தொடர்பிலும் இன்றைய கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் முன்னேற்றத்தின் அடிப்படையில், பதிவு செய்யப்படாத நிறுவனங்களை, இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் பொது சுகாதார பரிசோதகர்களின் கண்காணிப்புடன் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.