கத்தாரிலுள்ள 275 பேரை அழைத்துவர நடவடிக்கை

கத்தாரிலுள்ள 275 பேரை நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை

by Staff Writer 26-05-2020 | 1:46 PM
Colombo (News 1st) கத்தாரில் தங்கியுள்ள 275 இலங்கையர்களை வெகுவிரைவில் நாட்டிற்கு அழைத்துவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். கர்ப்பிணித் தாய்மார்கள் சுமார் 50 பேர் நாட்டிற்கு திரும்பும் எதிர்பார்ப்புடனுள்ளதாக அவர் கூறினார். குறித்த தாய்மார்கள் இன்று அல்லது நாளை நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளதாகவும் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் மேலும் குறிப்பிட்டார். இதனைத்தவிர, இலங்கைக்கு திரும்பும் எதிர்பார்ப்புடனுள்ள ஏனையோரையும் கூடிய விரைவில் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். கத்தாரில் உள்ள இலங்கையர்கள் சிலரை இன்று நாட்டிற்கு அழைத்துவரவிருந்த விமான பயணமும் தற்காலிமாக இரத்து செய்யப்பட்டது. குவைத்தில் இருந்து நாட்டிற்கு ஏற்கனவே அழைத்துவரப்ப்பட்ட இலங்கையர்கள் தனிமைப்படுத்தப்பட்டபோது அவர்களில் சிலர் தொற்றுக்குள்ளானதால், கத்தாரில் இருந்து நாட்டிற்கு வரவிருந்த விமானத்தை தற்காலிகமாக இரத்து செய்துள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.