ஆறுமுகன் தொண்டமான் காலமானார் 

ஆறுமுகன் தொண்டமான் காலமானார் 

by Bella Dalima 26-05-2020 | 9:19 PM
Colombo (News 1st) இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் காலமானார். 55 வயதான அவர் சுகயீனம் காரணமாக தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவர் மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்தார். 1964ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி பிறந்த அவர் பல முக்கிய பதவிகளையும் பொறுப்புக்களையும் வகித்து வந்தவர். அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவு தொடர்பிலான தகவல் அறிந்தவுடன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் தலங்கம வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்தனர். ஆறுமுகன் தொண்டமான் மலையக இந்திய வம்சாவளி பெருந்தோட்ட  சமூகத்திற்காக அயராது உழைத்த அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரன் என்பதும் குறிப்பிடத்தக்கது. கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வி பயின்ற ஆறுமுகன் தொண்டமான், 1990 ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடாக அரசியலுக்குள் பிரவேசித்தார். 1993 ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச் செயலாளராகவும், 1994 ஆம் ஆண்டு பொதுச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 1994 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட ஆறுமுகன் தொண்டமான், பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார். அன்று முதல் இன்று வரை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளராகவும்  தலைவராகவும் பாராளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் மலையக மக்களின் நலனுக்காக தொடர்ந்தும் அயராது உழைத்து வந்தார்.