கொழும்பு, கம்பஹா தவிர்ந்த பகுதிகளில் இன்று முதல் பஸ் போக்குவரத்து

கொழும்பு, கம்பஹா தவிர்ந்த பகுதிகளில் இன்று முதல் பஸ் போக்குவரத்து

எழுத்தாளர் Staff Writer

26 May, 2020 | 7:03 am

Colombo (News 1st) கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்து இன்று (26) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத் தரப்பினரால் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கு அமைய, இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் மாகாணங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்து இன்று முதல் முன்னெடுக்கப்படுகின்றது.

இதற்கமைய 5 பஸ் மார்க்கங்கள் ஊடாக வரும் பஸ்கள் கொழும்பு மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி வீதியூடாக வருகைதரும் மாகாணங்களுக்கு இடையிலான பஸ்கள் நிட்டம்புவயில் நிறுத்தப்படவுள்ளன.

கொழும்பு மார்க்க இலக்கம் ஐந்து ஊடாக செலுத்தப்படும் பஸ்கள் மினுவாங்கொடை வரை சேவையில் ஈடுபடவுள்ளன.

காலி வீதியூடாக சேவையில் ஈடுபடும் மாகாணங்களுக்கு இடையிலான பஸ்கள் பாணந்துறை வரை பயணிக்க முடியும் என அமைச்சு அறிவித்துள்ளது.

அவிசாவளையினூடாக கொழும்பு ஹைலெவல் வீதி மற்றும் லோலெவல் வீதியூடாக பயணிக்கும் மாகாணங்களுக்கு இடையிலான பஸ்கள் அவிசாவளை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன

அநுராதபுரம் – புத்தளம் மற்றும் குளியாப்பிட்டியவில் இருந்து நீர்கொழும்பு வீதியூடாக கொழும்புக்கு வருகைதரும் மாகாணங்களுக்கு இடையிலான பஸ்கள் நீர்கொழும்பு வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

தெற்கு அதிவேக வீதியூடாக ஹம்பாந்தோட்டையில் இருந்து வருகைதரும் பஸ்கள் கொட்டாவயில் நிறுத்தப்படவுள்ளன.

பஸ் போக்குவரத்து அதிகாலை 4.30 மணிக்கு ஆரம்பிக்கப்படுவதுடன் மாலை 6 மணியுடன் நிறைவுசெய்யப்படும் எனவும் பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

பஸ்கள் நிறுத்தப்படும் இடம்வரை மாத்திரமே பயணக் கட்டணத்தை அறவிட முடியும் என அமைச்சு அறிவித்துள்ளது.

பஸ்களில், பஸ்ஸின் இறுதி நிறுத்தம் தௌிவாக முன் கண்ணாடியில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என்பதுடன் சுகாதார பிரிவினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கு இணங்க அனைத்து பயணிகளும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்