கொழும்பில் 66 நாட்களின் பின்னர் ஊரடங்கு தளர்வு

கொழும்பில் 66 நாட்களின் பின்னர் ஊரடங்கு தளர்வு

எழுத்தாளர் Staff Writer

26 May, 2020 | 9:29 pm

Colombo (News 1st) கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் 66 நாட்களின் பின்னர் ஊரடங்கு சட்டம் இன்று தளர்த்தப்பட்டது.

இன்று முதல் நாள்தோறும் இரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரை நாட்டின் சகல மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

சுகாதார தரப்பு அரசாங்கத்திற்கு வழங்கிய ஆலோசனைகளுக்கு அமைவாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களைத் தவிர ஏனைய பகுதிகளில் மாகாணங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்து இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டது.

சில வீதிகள் ஊடாக கொழும்பு நோக்கிய மாகாண பஸ் போக்குவரத்து நிட்டம்புவ, மினுவங்கொட, பாணந்துறை, அவிசாவளை, நீர்கொழும்பு ஆகிய நகரங்களுடன் மட்டுப்படுத்தப்பட்டது.

அதிவேக வீதியில் ஹம்பாந்தோட்டையில் பயணத்தை ஆரம்பித்த பஸ் வண்டிகள் கொட்டாவையில் நிறுத்தப்பட்டன.

அதிகாலை 4.30-க்கு ஆரம்பமான மாகாண பஸ் போக்குவரத்து மாலை 6 மணியுடன் நிறைவுக்கு வந்தது.

பஸ் நிறுத்தப்படும் இடத்திற்கான கட்டணமே அறவிடப்பட வேண்டும் என பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் ஏனைய நாட்களைப் போன்று சன நடமாட்டம் குறைவாகவே இருந்தது.

66 நாட்களின் பின்னர் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில், கொழும்பிற்குள் பிரவேசிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது.

எவ்வாறாயினும், கொழும்பிற்கு வருவோரின் எண்ணிக்கை குறைந்திருப்பதை காண முடிந்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் கூறினர்.

கம்பஹா நகரில் பஸ் போக்குவரத்து இன்று வழமைபோன்று இடம்பெற்றது.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களும் தனியார் பஸ்களும் போதுமானளவு இருந்த போதிலும், குறைந்தளவான பயணிகளையே காண முடிந்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், கொழும்பிற்கு வருவதற்காக பெரும் எண்ணிக்கையிலான பயணிகள் நாட்டின் பல பகுதிகளிலுமுள்ள ரயில் நிலையங்களில் கூடியிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்