by Staff Writer 26-05-2020 | 9:39 AM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் நோயாளர்களுக்கான பரீட்சார்த்த, மலேரியா மருந்துப் பயன்பாட்டை உலக சுகாதார ஸ்தாபனம் நிறுத்தியுள்ளது.
பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக ஹைட்ரொக்ஸி குளோரோகுயின் (hydroxychloroquine) மருந்தினை, Covid - 19 நோயாளர்களுக்கு வழங்குவது நிறுத்தப்படுவதாக அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இதனையடுத்து, பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வந்த பரீட்சார்த்த நடவடிக்கை, முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
Covid -19 நோயாளர்களுக்கு ஹைட்ரொக்ஸி குளோரோகுயின் மருந்தை வழங்குவது, அவர்களுக்கு மரணத்தை ஏற்படுத்தும் அபாயத்தை அதிகரிப்பதாக அண்மைய ஆய்வொன்றில் கண்டறியப்பட்டதையடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மலேரியா மருந்துகள் இதய நோயை உண்டுபண்ணும் எனும் சுகாதாரத்தரப்பினரின் எச்சரிக்கைகளையும் மீறி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ச்சியாக இதனைப் பரிந்துரைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஹைட்ரொக்ஸி குளோரோகுயின் மருந்து, மலேரியாவுக்கு எதிராகச் செயற்படக்கூடியதென்பதுடன், ஆத்தரிட்டீஸ் போன்றவற்றுக்கும் வழங்கக்கூடியதென கண்டறியப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இதனை Covid - 19 இற்கு எதிராகப் பயன்படுத்துவதற்கு, ஆய்வு ரீதியாகப் பரிந்துரைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.