சீன சட்டங்களுக்கு எதிராக ஹொங்கொங்கில் ஆர்ப்பாட்டம்

சீன சட்டங்களுக்கு எதிராக ஹொங்கொங்கில் ஆர்ப்பாட்டம்; ஆர்ப்பாட்டத்தை கலைக்க நீர்த்தாரைப் பிரயோகம் 

by Staff Writer 24-05-2020 | 5:25 PM
Colombo (News 1st) சீனாவால் அமுல்படுத்தப்படவுள்ள புதிய பாதுகாப்புச் சட்டங்களுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஹொங்கொங் பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டு வீசியுள்ளனர். ​ஹொங்கொங்கின் மத்திய பகுதியில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் பேரணியாகச் சென்ற நிலையில், அவர்களைக் கலைப்பதற்காக கண்ணீர்ப்புகைக் குண்டுகளும் நீர்த்தாரைப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் பேரணியில் கலந்துகொண்ட 120 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சீனாவின் குறித்த திட்டத்திற்கு எதிர்ப்பு வௌியிட்டு, உலகம் முழுவதையும் சேர்ந்த 200 சிரேஷ்ட அரசியல்வாதிகள் இணைந்து கண்டன அறிக்கையொன்றை முன்னதாக வெளியிட்டிருந்தனர். ஹொங்கொங்கின் சுயாட்சி, சட்டவாட்சி மற்றும் அடிப்படை சுதந்திரங்கள் மீதான சீனாவின் விரிவான தாக்குதல் இதுவென அவர்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். ஹொங்கொங்கில், பிரிவினை, சதி செய்தல், தேசத்துரோகம், நாட்டைத் துண்டாடல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்குத் தடை விதிக்கும் சட்டமொன்றை நிறைவேற்ற சீனா முயற்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.