நாட்டை கட்டியெழுப்புவதே அனைத்து இலங்கையர்களுக்கும் உள்ள ஒரே வழி – பிரதமர்

நாட்டை கட்டியெழுப்புவதே அனைத்து இலங்கையர்களுக்கும் உள்ள ஒரே வழி – பிரதமர்

எழுத்தாளர் Staff Writer

24 May, 2020 | 7:06 pm

Colombo (News 1st) நாட்டைக் கட்டியெழுப்புவது மாத்திரமே அனைத்து இலங்கையர்களுக்கும் உள்ள ஒரே வழி என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் Covid – 19 தொற்று ஆகியவற்றின் பின்னரான இலங்கை எனும் தொனிப்பொருளில் பிரதமர் அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளார்.

2019 பெப்ரவரி 16ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு, வீழ்ச்சியடைந்த பொருளாதாரமே எஞ்சியதாகவும் அவ்வாறான நிலையிலேயே Covid – 19 தொற்றினால் உலகமே நிலைகுலைந்ததாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Covid – 19 தொற்றின் பின்னர் 1930களின் பின்னர் ஏற்பட்ட பாரிய சரிவிற்கு சமமான உலகப் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டுகின்றார்.

பொருளாதார வீழ்ச்சி மற்றும் வேலைவாய்ப்பின்மையால் அனைத்து நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையர்கள் சுபீட்சம் தேடி வௌிநாடுகளுக்குச் செல்வதற்கான சந்தர்ப்பம் மட்டுப்படுத்தப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

பாதிப்பிலிருந்து மீள்வதற்கு ஒன்றிணைந்து செயற்படாவிட்டால் எதிர்காலம் இருள் சூழந்ததாக அமையும் என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில் அரச சேவையின் உயரதிகாரியான ஜனாதிபதி செயலாளர் கலாநிதி P.B. ஜயசுந்தர, சம்பளத்தின் முடிந்தளவு தொகையை வழங்குமாறு அரச ஊழியர்களிடம் கோரிக்கை விடுத்தபோது எதிர்க்கட்சியினர் அவரை விமர்சித்ததாக பிரதமர் கூறியுள்ளார்.

திறமையான அதிகாரிகளைத் தாக்கி அரசாங்கத்தின் பொருளாதார மறுமலர்ச்சி வேலைத்திட்டத்தை முடக்குவது எதிர்க்கட்சியின் நோக்கம் என்பது தௌிவாகுவதாக பிரதமரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேறுபூசுதல் மற்றும் பொய் பிரசாரங்களை அடிப்படையாகக் கொண்ட நல்லாட்சி அரசியல் கலாசாரத்திற்கு Covid – 19 இன் பின்னரான உலகில் இடமில்லை என இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பூகோள நிலைமையின் கீழ் இலங்கையின் பொருளாதாரம் மற்றும் பிள்ளைகளின் எதிர்கால இருப்பைப் பேணல் நாட்டை நிர்வகிப்பவர்களின் திறமையிலேயே தங்கியுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

Covid – 19 தொற்று இலங்கையில் பரவியபோது நல்லாட்சிக் குழு ஆட்சி நடத்தியிருந்தால், நாட்டிற்கு நேர்ந்திருக்கும் நிலை குறித்து புதிதாகக் கூற வேண்டியதில்லை என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியிலிருந்து கீழ் மட்டத்திலுள்ள அனைவரும் வெற்றிகொள்ள முடியாது எனக் கூறப்பட்ட யுத்தத்தை வெற்றிகொண்டு 2006-2014க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் பாரிய சவாலுக்கு மத்தியிலும் பாரிய பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தியதாக பிரதமர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Covid – 19 தொற்றின் பின்னரான உலகில் இலங்கையை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு அவ்வாறான தலைமைத்துவமே அவசியம் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்