முறையற்ற அபிவிருத்தித் திட்டங்களால் வலுப்பெற்றுள்ள யானை - மனித மோதல்கள்

by Bella Dalima 23-05-2020 | 8:46 PM
Colombo (News 1st) யானை - மனித மோதலினை நிவர்த்திப்பதற்கு வருடமொன்றுக்கு 100 மில்லியன் ரூபாவிற்கும் அதிகத் தொகை செலவிடப்படுவதாக வன ஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் யானை - மனித மோதலால் 260-க்கும் அதிகமான யானைகளும் 150 மனிதர்களும் உயிரிழந்துள்ளதாக சூழலியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். முறையற்ற அபிவிருத்தித் திட்டங்கள் இந்த நெருக்கடி நிலையில் செல்வாக்கு செலுத்துவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். காட்டு யானை பிரச்சினை இந்தளவு உக்கிரமடைந்துள்ளமைக்கு காரணம் என்ன? யானைகள் கிராமங்களுக்குள் நுழைவதா அல்லது யானைகளின் வாழ்விடம் மனித வாழ்விடமாக மாற்றப்படுவதா? சூழலியலாளர்களின் கருத்திற்கமைய, கடந்த 20 வருடங்களுக்குள் மனித நடவடிக்கைகளால் அதிகளவு வனப்பகுதி அழிவடைந்துள்ளது. முறையற்ற அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் செய்கை நிலப்பரப்பு அதிகரிக்கப்பட்டமை இதில் ஆதிக்கம் செலுத்துகின்றது. ஊவா மாகாணத்தில் யால, குமண மற்றும் லாஹூகல சரணாலயப் பகுதிகள் அபிவிருத்தித் திட்டங்களில் உள்வாங்கப்பட்டுள்ளமையால், அங்கு அதிக அபாயம் நிலவுகின்றது. பன்னாட்டு நிறுவனங்களால் முன்னெடுக்கப்படும் வணிக செய்கைத் திட்டங்கள், சோளம் மற்றும் கரும்பு செய்கைகள் வனாந்தரங்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளன. மாத்தளையை மையப்படுத்திய புதிய திட்டங்களால் பத்தாயிரம் ஏக்கருக்கும் அதிக வனப்பகுதி அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளது. நாளொன்றுக்கு 150 கிலோகிராம் தாவரங்களின் பாகங்களை உட்கொள்ளும் யானைகளே இதனால் அதிக அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளன. நக்கில்ஸ் வனாந்தரப் பகுதியும் அழிவை எதிர்நோக்கியுள்ளதுடன், நாவுல, பல்லேகம, இலுக்கும்புர, லக்கல, தம்புள்ளை மற்றும் சிகிரியா ஆகிய இடங்களிலும் அந்தத் தாக்கம் வியாபித்துள்ளது. தம்புள்ளை - சிகிரமுல்ல அருணோதயகம பகுதி மக்கள் நீண்ட காலமாக காட்டு யானைகளால் அல்லலுறுகின்றனர். இவர்கள் முன்னெடுக்கும் செய்கைகளின் விளைச்சலால் காட்டு யானைகளே அதிகம் பயன்பெறுகின்றன. கந்தளாய் பகுதியில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் நிலவும் நிலையில், வனப்பகுதி அழிக்கப்படுவது தொடர்பில் அண்மையில் நியூஸ்ஃபெஸ்ட் செய்தி வெளியிட்டிருந்தது. வில்பத்து சரணாலயத்தின் 4,600 ஹெக்டயர் அழிக்கப்பட்டுள்ளதாக சூழலியல் அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன. மன்னார், தப்போவ, கல்லாறு ஆகிய பகுதிகளிலுள்ள வனாந்தரம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட மீள்குடியேற்றத் திட்டங்களினால் அங்கும் அபாய நிலை காணப்படுகின்றது. இருப்பிடங்கள் நிர்மாணிக்கப்பட்டமை, விவசாய செய்கை உள்ளிட்ட மனித செயற்பாடுகளால் பொலன்னறுவையின் சோமாவதிய உள்ளிட்ட இடங்களில் 3000 ஏக்கர் வனப்பகுதி அழிவடைந்துள்ளது. ஹம்பாந்தோட்டையின் லுணுகம்வெஹெர, பூந்தல மற்றும் உடவலவ வனப்பகுதிகளிலும் ஏனைய வனப்பகுதிகளிலும் வாழ்ந்த காட்டு யானைகளின் வாழ்விடம் வரையறுக்கப்பட்டுள்ளது. முறையற்ற அபிவிருத்தித் திட்டங்களே அதற்குக் காரணமாகும். இந்த விடயம் தொடர்பில் பல மாதங்களாக ஆராய்ந்து ஹம்பாந்தோட்டை - சூரியவெவ யானை - மனிதப் பிரச்சினைக்கான முகாமைத்துவத் திட்டம், மக்கள் சக்தி - பேராதனை பல்கலைக்கழகத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்டது. அந்த அறிக்கைக்கு அமைய, மக்களின் வாழ்விடங்கள் அதிகரித்தமை, வனப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட செய்கைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகின.