by Staff Writer 23-05-2020 | 5:44 PM
Colombo (News 1st) கொழும்பு - மாளிகாவத்தையில் தனியார் ஒருவர் நிதி உதவி வழங்கியபோது இடம்பெற்ற அசம்பாவிதத்தை வன்மையாகக் கண்டிப்பதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸில் இருந்து அனைவரையும் பாதுகாப்பதற்கு பல்வேறுபட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற நிலையில், நாட்டின் சுகாதாரத் துறையினர், பாதுகாப்பு தரப்பினரால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்களை பின்பற்றாமல் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற அசம்பாவிதத்தைக் கண்டிப்பதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு சுவனம் கிடைக்க வேண்டும் எனவும் காயமடைந்தவர்கள் அவசரமாக குணமடைய வேண்டும் என பிரார்த்திப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிவாரண உதவிகளை முறையாக உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி உரிய சட்டங்களை பேணி முன்னெடுக்குமாறு ஜம்இய்யத்துல் உலமா வழிகாட்டியுள்ள நிலையில், இவ்வாறான அசம்பாவிதங்கள் மன வேதனையைத் தருவதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நெருக்கடியின் போது ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது, எனினும் உதவிகளை வழங்கும்போது நாட்டின் சட்டம் மற்றும் சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களை கண்டிப்பாக பின்பற்றி நடக்க வேண்டும் என அகில இலங்கை ஜம்மிஇய்யத்துல் உலமா விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.