சட்டம் இருவேறாக பிரயோகிக்கப்படுகிறது

நீதித்துறையின் சட்டம் இருவேறாக பிரயோகிக்கப்படுகிறது: சி.வி.விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு

by Staff Writer 23-05-2020 | 5:19 PM
Colombo (News 1st) நீதித்துறையின் சட்டம் இருவேறாக தென் இலங்கைக்கும் வடக்கு, கிழக்கிற்கும் பிரயோகிக்கப்படுவதாக வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் யுத்த வெற்றிவிழா உரை தொடர்பான அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சிங்கள ஆட்சியாளர்கள் வடக்கு, கிழக்கிற்கு ஒன்றும் தெற்கிற்கு ஒன்றுமாக இருவேறு ஆட்சி நிர்வாகங்களை நடத்தி வருவதாகவும் வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்கும் தெற்கில் நடைபெற்ற போர் வெற்றி தினத்திற்கும் இடையேயான முரண் நிலையினூடாக தெட்டத்தௌிவாக இதனை புரிந்துகொள்ளலாம் எனவும் சி.வி.விக்கினேஸ்வரனின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கில் நினைவுகூறல் நிகழ்வுகளில் கலந்துகொண்டவர்கள் மீது கொரோனா தனிமைப்படுத்தல் விதிமுறைகள் பாய்ந்ததாகவும் தென் இலங்கையில் யுத்த வெற்றிவிழா கொண்டாடுபவர்கள் மீது எந்த சட்டமும் பாயவில்லை எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தீவை இரண்டாகப் பிரிக்கும் வகையில் உண்மையாக செயற்படுவது யார் என சி.வி.விக்கினேஸ்வரன் தனது அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார். யுத்த வெற்றிவிழா கொண்டாட்டத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரையில் நாட்டின் இன முரண்பாடு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். படையினருக்கு எதிராக செயற்பட்டால், சர்வதேச நிறுவனங்களில் இருந்து வௌியேறப்போவதாக ஜனாதிபதி விடுத்துள்ள எச்சரிக்கையால் இலங்கை எதிர்காலத்தில் பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் என அவர் மேலும் கூறியுள்ளார். முன்னர் போன்று அல்லாமல், ஐ.நா மற்றும் சர்வதேச சமூகம் இந்த அறிவிப்பு குறித்து தீவிரமாக கவனம் செலுத்த வேண்டும் எனவும் இதனை அலட்சியம் செய்யாமல் தமிழ் மக்களை பாதுகாக்கும் முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் சி.வி.விக்கினேஸ்வரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.