பாகிஸ்தான் விமான விபத்தில் 92 பேர் உயிரிழப்பு 

பாகிஸ்தான் விமான விபத்தில் 92 பேர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

by Bella Dalima 23-05-2020 | 2:54 PM
Colombo (News 1st) பாகிஸ்தான் - கராச்சியில் நேற்று (22) இடம்பெற்ற விமான விபத்தில் 92 பேர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விபத்திற்குள்ளான விமானத்தில் 91 பயணிகளும் 8 விமானப் பணியாளர்களும் பயணித்திருந்த நிலையில், அவர்களில் இருவர் உயிர் தப்பியுள்ளனர். உயிர் தப்பிய இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், ஏனைய 5 பேரும் உயிரிழந்திருக்கலாமென அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 19 பேர் அடையாளங்காணப்பட்டுள்ளனர். விமானம் விபத்திற்குள்ளான போது, மோதிய வீடுகளிலும் பலர் இருந்துள்ளதுடன், அவர்களில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருவதாக ஊடகங்கள் அறிவித்துள்ளன. பாகிஸ்தான் சர்வதேச விமான சேவைக்கு சொந்தமான பயணிகள் விமானமொன்று, கராச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் நேற்று பிற்பகல் வீழ்ந்து விபத்திற்குள்ளானது. விமானம் தரையிறங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக, குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றது. லாகூரிலிருந்து கராச்சி - ஜின்னா சர்வதேச விமான நிலையம் நோக்கி பயணித்த Airbus A320 ரக விமானமொன்றே விபத்திற்குள்ளானது. விமானம் விபத்திற்குள்ளாவதற்கு முன்னர், விமானத்தின் இயந்திரங்கள் செயலிழந்தமை தொடர்பில் விமானி அறிவித்துள்ளதுடன், பின்னர் அபாய அறிவிப்பும் விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் நேரப்படி பிற்பகல் 2.30 அளவில் விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் விபத்திற்குள்ளான பகுதியில் இருந்த குடியிருப்புகள் பலவும் நிர்மூலமாகியுள்ளன.