வடக்கு, கிழக்கு வீரர்களுக்கு வசதி வாய்ப்புகளை வழங்குமாறு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வலியுறுத்தல்

by Bella Dalima 22-05-2020 | 8:37 PM
Colombo (News 1st) வடக்கு, கிழக்கு மாகாணங்களில் திறமையான இளம் கிரிக்கெட் வீரர்கள் இருக்கிறார்கள் எனவும் அவர்களுக்கு உரிய வசதிகளும் வாய்ப்புகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும் என்றும் இலங்கையின் முன்னாள் சிரேஷ்ட கிரிக்கெட் வீரர்கள் சிலர் பிரதமர் முன்னிலையில் தெரிவித்துள்ளனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுடன் அலரி மாளிகையில் நேற்று (21) நடைபெற்ற கலந்துரையாடலில் இலங்கை முன்னாள் வீரர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.
வட மாகாணத்தில் 26 பாடசாலைகள் கிரிக்கெட் விளையாடுகின்றன. அவர்களுக்கென மைதானத்துடன் ஓர் ஆடுகளம் மாத்திரமே உள்ளது. வடக்கு கிழக்கை எடுத்துக்கொண்டால் யுத்தத்தின் பின்னர் அங்கு திறமை வாய்ந்த பிள்ளைகள், சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் இன்னும் அதற்கான வசதிகளைப் பெற்றுக்கொடுக்கவில்லை. அது தொடர்பில் நமக்கும் பொறுப்புள்ளது என்றே நான் நினைக்கின்றேன்
என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இலங்கை கிரிக்கெட் அணியின் மற்றுமொரு முன்னாள் அணித்தலைவரான குமார் சங்கக்கார , வடக்கு, கிழக்கில் போட்டித் தொடர்களை நடத்திய போது ஆற்றல்கள் மிக்க பல வீரர்கள் இருப்பதை அவதானிக்க முடிந்ததாகக் கூறியுள்ளார். எனினும், அவர்களுக்கான வசதிகள் குறைவாகவே உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு, கிழக்கு வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உதவிகள் போதாது எனவும் அங்கிருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை வழங்கப்பட வேண்டும் எனவும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார். வீழ்ச்சியடைந்துள்ள இலங்கை கிரிக்கெட்டை மேம்படுத்த அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என அவர் மேலும் தௌிவுபடுத்தியுள்ளார்.