பொதுத்தேர்தலை ஆட்சேபிக்கும் மனுக்களை தள்ளுபடி செய்யுமாறு சட்ட மா அதிபர் கோரிக்கை

by Staff Writer 22-05-2020 | 7:01 PM
Colombo (News 1st) ஜூன் 20 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படுவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் கோரப்பட்டுள்ள விடயங்களில் எவ்வித சட்ட அடிப்படைகளும் இல்லை என்பதால், அவற்றை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதி வழங்காது, தள்ளுபடி செய்யுமாறு சட்ட மா அதிபர் இன்று கோரிக்கை விடுத்துள்ளார். பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவின் தலைமையிலான உயர் நீதிமன்றத்தின் ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது. வேட்புமனுக்கள் கையேற்கப்பட்டதன் பின்னர் , தேர்தலை இடைநிறுத்துமாறு நீதிமன்றத்தில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைகளில் எவ்வித சட்ட அடிப்படைகளும் காணப்படவில்லை என்பது புலனாவதாக சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜராகிய மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் இந்திகா தேவமுனி டி சில்வா அறிவித்துள்ளார். பொதுத்தேர்தலுக்காக வேட்புமனுக்களை கையளித்துள்ள அங்கீகரிக்கப்பட்ட 304 அரசியல் கட்சிகள் மற்றும் 311 சுயேட்சைக் குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 7452 வேட்பாளர்களையும் இந்த மனுக்களின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிட வேண்டும் என்கின்ற போதிலும், அவர்கள் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்படாமை மிக பலவீனமான செயல் எனவும் மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் மன்றில் குறிப்பிட்டுள்ளார். மிக முக்கியமானவர்கள் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்படாமை, குறித்த மனுக்களை தள்ளுபடி செய்வதற்கு போதுமான விடயங்களாக காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சுகாதார துறையினரால், கொரோனா தொற்று குறைவடைந்துள்ளதாக பரிந்துரைக்கப்படாத போது, பொதுத்தேர்தலை நடத்துவது மக்களின் வாழ்க்கையை ஆபத்திற்குள்ளாக்கும் என மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ள போதிலும், இந்த விடயம் உள்ளிட்ட மேலும் சில விடயங்களை உறுதிப்படுத்துவதற்கான எவ்வித ஆவணங்களையும் மனுதாரர்கள் மன்றுக்கு சமர்ப்பிக்கவில்லை என மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த மனுக்களின் பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஜனாதிபதிக்கு பதிலாக சட்ட மா அதிபர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதால், ஜனாதிபதி சார்பில் தாம் விடயங்களை சமர்பிப்பதாகவும் மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் இந்திகா தேவமுனி டி சில்வா அறிவித்துள்ளார். தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கான காலப்பகுதி, தேர்தல் நடத்துவதை அறிவிப்பதற்கே தவிர, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவால் தேர்தலை ஒத்திவைப்பதற்கான காலம் அல்ல எனவும் அவர் கூறியுள்ளார். இன்றைய சமர்ப்பணங்களை தொடர்ந்து இந்த மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனை எதிர்வரும் 26 ஆம் திகதி காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீதான ஐந்தாம் நாளுக்குரிய பரிசீலனை உயர் நீதிமன்றத்தில் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது, மனுவின் பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஜனாதிபதி செயலாளர் கலாநிதி P.B. ஜயசுந்தரவின் சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா மனு தொடர்பான தமது தரப்பு அடிப்படை விடயங்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.