by Staff Writer 22-05-2020 | 3:26 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றினால் ஏற்பட்ட நெருக்கடி நிலையில், தொழிலாளர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் எதிர்நோக்கும் பல்வேறு சிக்கல்கள் தொடர்பில் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
தொழிற்சாலைகள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களின் உரிமையாளர்களிடமிருந்து 87 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தொழில் அமைச்சின் செயலாளர் சரத் அபயகுணவர்தன தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளமை, சம்பளம் கிடைக்கப்பெறாமை, சம்பளம் அறவிடப்படுகின்றமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர் குழுக்கள் என்பனவும் முறைப்பாடுகளை முன்வைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளை பரிசீலனை செய்து விரைவில் நடவடிக்கை எடுப்பதற்கான வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்படுவதாக தொழில் அமைச்சின் செயலாளர் சரத் அபயகுணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
தொழில் வழங்குநர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கிடையே கலந்துரையாடலொன்றை நடத்துவதன் மூலம், இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.