தனிமைப்படுத்தல் சட்டத்தில் கொரோனா ஒழிப்பு விதிமுறைகளும் உள்ளடக்கப்பட வேண்டும்: அனில் ஜாசிங்க வலியுறுத்தல்

தனிமைப்படுத்தல் சட்டத்தில் கொரோனா ஒழிப்பு விதிமுறைகளும் உள்ளடக்கப்பட வேண்டும்: அனில் ஜாசிங்க வலியுறுத்தல்

தனிமைப்படுத்தல் சட்டத்தில் கொரோனா ஒழிப்பு விதிமுறைகளும் உள்ளடக்கப்பட வேண்டும்: அனில் ஜாசிங்க வலியுறுத்தல்

எழுத்தாளர் Staff Writer

22 May, 2020 | 3:46 pm

Colombo (News 1st) தனிமைப்படுத்தல் சட்டத்தில் கொரோனா ஒழிப்பு விதிமுறைகளும் உள்ளடக்கப்பட வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் , விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பு – மாளிகாவத்தையில் நேற்று (21) இடம்பெற்ற அசம்பாவிதம் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே ,சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

நாட்டில் தற்போது காணப்படும் சுகாதார விதிமுறைகள் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு மக்களை ஒன்றுகூட்ட முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படும் சந்தர்ப்பத்தில், இவ்வாறான செயற்பாடுகள் மீண்டும் அச்சநிலையைத் தோற்றுவிக்கும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

ஆகவே, கொரோனா ஒழிப்பிற்கான ஒழுங்கு விதிகளை தனிமைப்படுத்தல் சட்டத்திற்குள் உள்வாங்கும் பட்சத்தில், சுகாதாரத்துறையினரால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளுக்கு மேலும் பயன் கிட்டும் என அவர் நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.

பல பகுதிகளில் ஊரடங்கு தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், சுகாதார வழிமுறைகளை பின்பற்றாது செயற்படும் பட்சத்தில், வைரஸ் தொற்று தீவிரமாக பரவக்கூடும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கூறியுள்ளார்.

இதன் காரணமாக கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பான வழிமுறைகளை எதிர்வரும் 02 வருடங்களுக்கு உரிய முறையில் பின்பற்ற வேண்டியது அனைவரினதும் சமூகப் பொறுப்பு என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார்.

சமூகத்தில் கொரோனா நோயாளர்கள் தற்போது அடையாளம் காணப்படாவிடினும், நோய்த்தொற்றுக்கான வைரஸ் எங்காவது இருக்கக்கூடும் என அவர் கூறியுள்ளார்.

தற்போது கடற்படையினர் மற்றும் வௌிநாடுகளில் இருந்து நாட்டிற்கு அழைத்து வருவோரிடமே COVID-19 தொற்று கண்டுபிடிக்கப்படுவதாக விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக இலங்கையில் கொரானா வைரஸ், சமூகத் தொற்றாகக் காணப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் இதுவரை 1055 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்று 27 பேர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிரித்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 15 பேர் துபாயிலிருந்து வருகை தந்தவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

குவைத்திலிருந்து வருகை தந்த ஒருவருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டதுடன், ஏனைய 11 பேரும் கடற்படையை சேர்ந்தவர்கள் என அவர் குறிப்பிட்டார்.

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 426 பேர் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர்.

இதனிடையே, நாட்டில் COVID-19 தொற்றுக்குள்ளாகி குணமடைந்தோரின் எண்ணிக்கை 620 ஆக அதிகரித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்