இறக்குமதி செய்யப்படும் உணவுப்பொருட்கள் பலவற்றுக்கு விசேட வர்த்தக வரி அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் உணவுப்பொருட்கள் பலவற்றுக்கு விசேட வர்த்தக வரி அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

22 May, 2020 | 6:49 pm

Colombo (News 1st) சீனி, பருப்பு, உருளைக்கிழங்கு, செத்தல் மிளகாய், டின் மீன் உள்ளிட்ட இறக்குமதி செய்யப்படும் பல உணவுப்பொருட்களுக்கான விசேட வர்த்தக வரி இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதிய வரித்திருத்தங்கள் இன்று முதல் 6 மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் சீனிக்கு அறவிடப்பட்ட 35 ரூபா வரி, இன்று நடைமுறைப்படுத்தப்பட்ட வரி திருத்தங்களுக்கு அமைய 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ஒரு கிலோகிராம் சீனிக்கான இறக்குமதி வரி 15 ரூபாவால் உயர்வடைந்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் டின் மீனுக்கு அறவிடப்பட்ட விசேட வர்த்தக வரி 100 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்பிரகாரம், ஒரு கிலோகிராம் டின் மீனுக்கான இறக்குமதி வரி 50 ரூபாவால் உயர்வடைந்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கிற்கான வரி 25 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கிற்கு 25 ரூபா வரி அறவிடப்பட்டதுடன், இன்று நடைமுறைப்படுத்தப்பட்ட வரி திருத்தத்திற்கு அமைய 50 ரூபாவாக அறவிடப்படவுள்ளது.

ஒரு கிலோகிராம் கடலைக்கான விசேட வர்த்தக வரி 5 ரூபாவில் இருந்து 10 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோகிராம் வெள்ளைப்பூண்டிற்காக இதுவரையில் அறவிடப்பட்ட வரி 40 இருந்து 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சிறிய வெங்காயத்திற்கான விசேட வர்த்தக வரி, 50 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் யோகட்டிற்கு 625 ரூபா இதுவரையில் விசேட வர்த்தக வரியாக அறவிடப்பட்ட நிலையில், இன்று முதல் 800 ரூபா அறவிடப்படவுள்ளது.

இதேவேளை, திராட்சை, ஆப்பிள், தோடம்பழம், பேரிச்சம்பழம், மரமுந்திரிகை, சோளம், மார்ஜரின், பலசரக்கு மற்றும் பாம் ஓயில் உள்ளிட்ட பல பொருட்களின் விசேட வர்த்தக வரியும் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்