மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்ற யுவதியை காப்பாற்ற சென்ற இளைஞர் உயிரிழப்பு 

by Bella Dalima 21-05-2020 | 5:13 PM
Colombo (News 1st) தலவாக்கலை - மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்ற யுவதியைக் காப்பாற்ற முயன்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். தலவாக்கலையை சேர்ந்த 22 வயதான யுவதி ஒருவர் இன்று காலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் குதித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அவர் தலவாக்கலை ரயில் வீதியிலுள்ள பாலத்திலிருந்தே நீர்த்தேக்கத்தில் குதித்துள்ளார். இதனை அவதானித்த அங்கிருந்த ரிஸ்வான் எனும் இளைஞர், அந்த யுவதியை காப்பாற்றும் நல்லெண்ணத்துடன் நீர்த்தேக்கத்தில் குதித்துள்ளார். ரிஸ்வான் கரை சேர்வதற்காக சூழ இருந்தவர்கள் கயிற்றை வீசி உதவிய போதிலும் அவர் தனது முயற்சியில் பின்வாங்காமல் யுவதியை காப்பாற்றியுள்ளார். உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்கான இந்தப் போராட்டத்தில் ஒரு கட்டத்தில் இருவருமே நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த இக்கட்டான தருணத்தில் நீரில் தத்தளிக்கும் இருவரையும் காப்பாற்றும் எதிர்பார்ப்புடன் தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும், மேலும் இரண்டு பொலிஸாரும் நீர்த்தேக்கத்தில் குதித்துள்ளனர். அவர்களின் முயற்சியின் பலனாக தற்கொலைக்கு முயன்ற யுவதி காப்பாற்றப்பட்டு லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும், அந்த யுவதியைக் காப்பாற்றுவதற்காக நீர்த்தேக்கத்தில் குதித்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.