தொற்றுள்ள தாய்மாருக்கு தொற்றற்ற குழந்தைகள் பிறப்பு

கொரோனா தொற்றுக்குள்ளான தாய்மார்களுக்கு ஆரோக்கியமான 100 குழந்தைகள் பிறப்பு 

by Chandrasekaram Chandravadani 21-05-2020 | 3:05 PM
Colombo (News 1st) இந்தியாவின் மும்பையிலுள்ள வைத்தியசாலை ஒன்றில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தாய்மார்களுக்கு நூற்றுக்கும் அதிகமான ஆரோக்கியமான குழந்தைகள் பிறந்துள்ளன. இவ்வாறு பிறந்த 115 குழந்தைகளில் மூவருக்கு ஆரம்பத்தில் Covid-19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டபோதும் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அவர்களுக்கு தொற்று இல்லை என அறிய முடிந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, குறித்த வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான இரண்டு கர்ப்பிணித் தாய்மார்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களில் ஒருவர் குழந்தையை பிரசவிப்பதற்கு முன்னதாக உயிரிழந்ததாக வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர். தொற்றுள்ள தாய்க்கு பிறந்த குழந்தைகளில்  56 ஆண் குழந்தைகளும் 59 பெண் குழந்தைகளும் அடங்குகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்த கர்ப்பிணித் தாய்மார்கள் அனுமதிக்கப்பட்டுள்ள விசேட பிரிவில் 65 வைத்தியர்கள் மற்றும் 24 தாதிகள் அடங்கிய குழு சேவையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்தத் தாய்மார்களில் அதிகமானோருக்கு நோய் அறிகுறிகள் தென்படவில்லை எனவும் சிலருக்கு காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் மாத்திரமே காணப்பட்டதாகவும் குறித்த வைத்தியசாலையின் வைத்தியர் அருண் நாயக் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றினால் இதுவரையில் 730 இற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதோடு, சுமார் 20,000 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.