இந்தோனேசியாவிலிருந்து மீனவர்கள் தொடர்புகொண்டனர் 

இந்தோனேசியாவிற்கு அடித்துச்செல்லப்பட்ட மீனவர்கள் வானொலி சமிக்ஞை கட்டுப்பாட்டு நிலையத்துடன் தொடர்பு

by Bella Dalima 21-05-2020 | 8:17 PM
Colombo (News 1st) இந்தோனேசியாவை அண்மித்த கடற்பரப்பிற்கு அடித்துச்செல்லப்பட்ட படகில் இருந்த மீனவர்களும் அவர்களைக் காப்பாற்றச் சென்ற சயுர கப்பலில் இருந்தவர்களும் இன்று முற்பகல் வானொலி சமிக்ஞை கட்டுப்பாட்டு நிலையத்துடன் தொடர்பு கொண்டிருந்தனர். இவர்கள் ஏப்ரல் 19 ஆம் திகதிக்கும் மே 2 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் மீன்பிடிக்காக கடலுக்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் சூறாவளி காரணமாக இந்தோனேசிய கடற்பரப்பிற்கு அடித்துச்செல்லப்பட்டனர். குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்ற 12 ஆழ்கடல் மீனவ படகுகள், இந்தோனேசியாவிற்கு அண்மித்த கடற்பரப்பில் தற்போதுள்ளன. குறித்த மீனவ படகுகள், ஏப்ரல் 19 ஆம் திகதியில் இருந்து மே 2 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், குடாவெல்ல பகுதியில் இருந்து தொழிலுக்கு சென்றுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார். இலங்கையில் இருந்து 700 கடல் மைல் தொலைவில் தற்போது மீனவர்கள் உள்ளனர். குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்திலுள்ள வானொலி சமிக்ஞை மத்திய நிலையத்தில் இருந்து இன்று காலை மீனவர்களுடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டது. சயூரி 6 என்ற கப்பலில் இருந்த மீனவர்களே தொடர்புகொண்டுள்ளனர். சில படகுகளிலுள்ள மீனவர்களுக்கு குடிநீர் இல்லை என குடாவெல்ல படகுகளின் உரிமையாளர் ஒருவர் கூறினார். நவீன தொழில்நுட்பத்துடனான ஆழ்கடல் கண்காணிப்பு கப்பலான சயுர கப்பல், மீனவர்களுக்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவதற்காக எரிபொருளுடன் செல்வதாக கடற்படையினர் கூறினர். குறித்த கப்பல் இன்று காலை ஹம்பாந்தோட்டை தொடர்பாடல் நிலையத்துடன் தொடர்பை ஏற்படுத்தி, தற்போது 520 கடல் மைல் தூரத்திற்கு பயணித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். மேலும், மீனவ படகொன்று விபத்திற்குள்ளாகியுள்ளதுடன், அதிலிருந்த 6 மீனவர்களும் அருகிலுள்ள மீனவ படகுகளின் ஊடாக காப்பாற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.