8 பில்லியன் ரூபா செலவில் மற்றுமொரு சர்வதேச மைதானம் தேவையா: ஶ்ரீ லங்கா கிரிக்கெட் அதிகாரிகள் சிந்திப்பார்களா?

8 பில்லியன் ரூபா செலவில் மற்றுமொரு சர்வதேச மைதானம் தேவையா: ஶ்ரீ லங்கா கிரிக்கெட் அதிகாரிகள் சிந்திப்பார்களா?

எழுத்தாளர் Staff Writer

20 May, 2020 | 9:20 pm

Colombo (News 1st) பாதுக்க பகுதியில் அடையாளம் காணப்பட்ட காணியை மையமாகக் கொண்டு சகல வசதிகளுடன் கூடிய மைதானத்தை நிர்மாணிக்க இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மட்ட கிரிக்கெட் மைதானப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் வேலைத்திட்டமாக இதனை நடைமுறைப்படுத்துவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதுக்கயில் அமைந்துள்ள ஶ்ரீ லங்கா டெலிகொம் பல்கலைக்கழகத்தின் கீழுள்ள காணியின் ஒரு பகுதியில் இந்த மைதானத்தை நிர்மாணிப்பதற்காக இணக்கப்பாட்டு ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டதாக கடந்த வருடம் நவம்பர் 21 ஆம் திகதி ஶ்ரீ லங்கா கிரிக்கெட் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

36 ஏக்கரில் பல்கலைக்கழகம் அமைந்துள்ள காணியில் பல கட்டங்களாக அந்த மைதானத்தை நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

அதன் முதற்கட்டமாக அந்தக் காணி மைதானத்திற்கு ஏற்றவாறு மாற்றப்பட உள்ளதாகவும், அதன் பின்னர் சகல வசதிகளுடனான கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கும் பொறுப்பு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தை சார்ந்ததாக இருக்கும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைவாக 6 ஆடுகளங்களைக் கொண்ட பிரதான ஆடுகளம், நீர் வடிந்தோடும் கட்டமைப்பு, நவீன வசதிகளுடனான விளையாட்டரங்கு மற்றும் பயிற்சி ஆடுகளங்களை நிர்மாணிக்கும் பொறுப்பை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வகிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் 18 வருட காலத்திற்கு கைச்சாத்திடப்பட்டுள்ளதுடன், மைதானத்தின் நிர்வாகம் இரண்டு தரப்பினரையும் இணைத்து உருவாக்கப்பட்ட முகாமைத்துவ குழு ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது.

ஒப்பந்தத்தின் பிரகாரம் மைதானத்தின் சகல பராமரிப்பு செயற்பாடுகளும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் அங்கம் வகிக்கும் விளையாட்டுக் கழகங்களும், ஶ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்திற்கும் மைதானத்தை பயன்படுத்த இடமளிக்கப்படும்.

இந்த ஒப்பந்தத்தில் ஶ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவரும், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளரும் கையொப்பமிட்டுள்ளனர்.

இதேவேளை, சர்வதேச கிரிக்கெட் பேரவை ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படவுள்ளதாக ICC-ஐ மேற்கோள்காட்டி ‘தி ஐலன்ட்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அது தொடர்பான இறுதித் தீர்மானம் இம்மாத இறுதியில் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் குழுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை, அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிறுவனத்தின் ஊழியர்களினது சம்பளமும் குறைக்கப்பட்டுள்ளதாக தி ஐலன்ட் பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியில் இலங்கையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை நிர்மாணிப்பது குறித்து முன்னாள் அணித்தலைவரான மஹேல ஜயவர்தன மீண்டும் கருத்து வௌியிட்டுள்ளார்.

அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் தகவலில் இலங்கை தற்போதிருக்கும் வசதிகளுடனேயே இருபதுக்கு 20 மற்றும் சர்வதேச ஒருநாள் உலகக்கிண்ண போட்டிகளை நடத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கு தேவையான நிர்மாணப் பணிகள் அதற்காக கிடைக்கும் நிதி மூலமே முன்னெடுக்கப்படும் எனவும் மஹேல கூறியுள்ளார்.

10 – 15 வருடங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் உலகக்கிண்ணத் தொடரின் அனுசரணை கிடைக்கும் என நினைத்து 40 மில்லியன் டொலர் செலவழித்து மைதானம் நிர்மாணிப்பது அர்த்தமற்றது என்பதே அவரது கருத்து.

இவ்வாறான பின்புலத்தில் 8 பில்லியன் ரூபா செலவழித்து மற்றொரு சர்வதேச மைதானத்தை இலங்கையில் நிர்மாணிப்பது குறித்து ஶ்ரீ லங்கா கிரிக்கெட் அதிகாரிகள் மீண்டும் சிந்திக்க வேண்டுமல்லவா?

இதேவேளை, உத்தேசிக்கப்பட்டுள்ள மைதான நிர்மாணம் குறித்து தாம் வெளியிட்ட கருத்திற்கு மன்னிப்புக் கோருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான உதய கம்மன்பில ட்விட்ரில் பதிவிட்டுள்ளார்.

அமைச்சர் பந்துல குணவர்தன வழங்கிய தவறான தகவல்களை நினைவில் வைத்து ICC-யின் உதவியில் மைதானம் நிர்மாணிக்கப்படுகிறது என தாம் கூறியதாக உதய கம்மன்பில தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்