ஜூன் 20 இல் பொதுத் தேர்தலை நடத்த முடியாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு 

by Staff Writer 20-05-2020 | 1:08 PM
Colombo (News 1st) நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் எதிர்வரும் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்த முடியாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு மதிப்பீடு செய்துள்ளதாக, ஆணைக்குழு சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் உயர்நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார். ஏப்ரல் 25 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும் நாட்டில் ஏற்பட்டுள்ள Covid - 19 அச்சுறுத்தல் காரணமாக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தேர்தலை பிற்போட வேண்டிய நிலை ஏற்பட்டதாக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். அதன்படி, சுகாதாரத் தரப்பினரின் ஆலோசனைகளை அடிப்படையாக வைத்தே ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கு ஆணைக்குழு தீர்மானித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் நாட்டின் தற்போதைய சூழ்நிலையிலும் ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்த முடியாதென பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில், தேர்தல்கள் ஆணைக்குழு சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி சுட்டிக்காட்டினார். எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்துவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை மூன்றாவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று (20) காலை 10.30 மணியளவில் மனுக்கள் மீதான பரிசீலனை ஆரம்பமானது. இந்த மனுக்கள் மீதான பரிசீலனை கடந்த இரண்டு நாட்களாக உயர்நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டது. ஜூன் 20 ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்துவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரினால் வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் மற்றும் பாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வௌியிட்ட வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி, சட்டத்தரணி சரித்த குணரத்ன உள்ளிட்ட தரப்பினரால் இந்த அடிப்படை உரிமை மனுக்கள் மற்றும் இடை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.