7 நாள் குழந்தையுடன் நிர்க்கதியான தம்பதி

குடியிருப்பிற்கு தீ வைப்பு: 7 நாள் குழந்தையுடன் நிர்க்கதியான தம்பதிக்கு உதவிய பாலித்த தெவரப்பெரும

by Bella Dalima 20-05-2020 | 8:16 PM
Colombo (News 1st) மத்துகம - வேத்தேவ பகுதியில் ஒரு குடும்பத்தினர் வசித்து வந்த தற்காலிகக் குடியிருப்பிற்கு நேற்று (19) இரவு தீ வைக்கப்பட்டுள்ளது. இதனால், குறித்த குடியிருப்பில் வசித்த தம்பதியர் பிறந்து 7 நாட்களேயான தமது குழந்தையுடன் நிர்க்கதியாகியுள்ளனர். இதற்கு முன்னரும் தமது குடியிருப்பிற்கு சேதம் விளைவிக்கப்பட்டதாகவும் நேற்று இது தொடர்பில் மத்துகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்றிருந்த போதும், அது சாத்தியப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். முன்னாள் பிரதி அமைச்சர் பாலித்த தெவரப்பெரும இன்று முற்பகல் சேதமாக்கப்பட்ட குடியிருப்பிற்கு சென்றிருந்தார். குடியிருப்பிற்கு தீ வைப்பது கொலைக்குற்றத்திற்கு அடுத்ததாகவுள்ள மிகப்பெரிய குற்றமாகும். எனினும், இதனை விசாரிக்க இன்னமும் பொலிஸார் வரவில்லை என பாலித்த தெவரப்பெரும குறிப்பிட்டார். இதனையடுத்து, இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் அங்கு வந்திருந்தனர். சந்தேகநபரை தாம் கைது செய்துள்ளதாகவும் உடனே பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்து முறைப்பாட்டை பதிவு செய்யுமாறும் குறித்த தம்பதியரிடம் பொலிஸார் குறிப்பிட்டனர். இது தொடர்பில் மத்துகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை தொடர்புகொண்டு வினவியபோது, சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு தரப்பினரையும் அழைத்து சமரசப்படுத்தியதாகக் கூறினார். இதனிடையே முன்னாள் பிரதி அமைச்சர் பாலித்த தெவரப்பெரும இந்த தம்பதியினர் தங்குவதற்காக தமக்கு சொந்தமான வீடொன்றை வழங்கியுள்ளார்.