குகுலே கங்கை நீர்த்தேக்க வான் கதவுகள் திறப்பு

சீரற்ற வானிலையால் 7,000 பேர் பாதிப்பு

by Staff Writer 20-05-2020 | 11:01 AM
Colombo (News 1st) நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையினால் 7,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மழையுடனான வானிலையினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் இரத்தினபுரி மாவட்டத்தில் 3 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட செயலாளர் மாலனீ லொக்குபோதாகம தெரிவித்துள்ளார். 10 பாதுகாப்பு மத்திய நிலையங்களில் 106 குடும்பங்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அதேநேரம் களு, கிங் மற்றும் நில்வளா கங்கைகளின் நீர்மட்டம் படிப்படியாக குறைவடைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த பகுதிகளில் மீண்டும் கடும் மழை பெய்தால் ஆறுகளின் நீர்மட்டம் உயர்வடையக்கூடும் என திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் சுகீஸ்வர பண்டார தெரிவித்துள்ளார். எனவே வானிலை தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு அவர் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார். இதனிடையே, குக்குலே கங்க நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் நீர்த்தேக்கத்தை அண்மித்த பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. வெள்ளம் உள்ளிட்ட அனர்த்தங்களினால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காலி மாவட்ட செயலாளர் சோமரத்ன விதானபத்திரன தெரிவித்துள்ளார். இதனிடையே நுவரெலியா மாவட்டத்தின் அல்டன் தோட்டத்திலேயே அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. அங்கு 173.5 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இன்று 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை வீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. தென், மேல், சப்ரகமுவ மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது. அக்கரப்பத்தனையில் நேற்று பெய்த பலத்த மழை காரணமாக 4 குடும்பங்களைச் சேர்ந்த 16 பேர் வீடுகளில் இருந்து வௌியேற்றப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்துள்ளார். இந்தநிலையில், மண்மேடு சரிந்து வீழ்ந்தமையால் தடைப்பட்டிருந்த ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது. நிலவிவரும் கடும் மழையுடனான வானிலை காரணமாக குறித்த வீதியின் பல இடங்களில் மண்மேடு சரிந்து வீழ்ந்தமையால் அப்பகுதியுடனான போக்குவரத்து நேற்று தடைப்பட்டிருந்தது. வட்டவளை - தியகல, வட்டவளை சிங்கள வித்தியாலயத்திற்கு அருகிலும் ஹட்டன் - வூட்லன்ட் பகுதியிலும் மண்மேடு மற்றும் கற்பாறை சரிந்து வீழந்தமையால் நேற்று காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை அவ்வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் சரிந்துவீழ்ந்த மண்மேடுகளை வீதி அபிவிருத்தி அதிகார சபை, இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து அகற்றியதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில், மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த நீர்த்தேக்கங்களில் நீர் கொள்ளளவு 56 வீதம் வரை அதிகரித்துள்ளது. இதற்கிணங்க, மின் உற்பத்தி 31.7 வீதம் வரை அதிகரித்துள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. நிலவிவரும் மழையுடனான வானிலை காரணமாக காசல்ரீ நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 60 வீதமாகவும் மவுசாகல நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 48 வீதம் வரையிலும் அதிகரித்துள்ளதுடன் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு 54 வீதம் வரை அதிகரித்துள்ளது. நாளாந்த மின்சார தேவையில் 65.14 வீதம் நிலக்கரி மற்றும் அனல்மின் உற்பத்தி நிலையங்களின் மூலம் பூர்த்தி செய்யப்படுவதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.  

ஏனைய செய்திகள்