ஆம்பன் சூறாவளியின் தாக்கம் நாளையுடன் குறைவடையும்

by Staff Writer 20-05-2020 | 4:34 PM
Colombo (News 1st) ஆம்பன் சூறாவளியின் (Amphan Cyclone) தாக்கம் நாளையுடன் (21) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள ஆம்பன் சூறாவளி வடகிழக்காக நாட்டை விட்டு நகர்ந்து செல்வதுடன், இன்று பிற்பகல் பங்களாதேஷின் மேற்கு கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மன்னாரில் இருந்து திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை மற்றும் காலியில் இருந்து பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்பிராந்தியங்களில் காற்று மணித்தியாலத்திற்கு 60 கிலோமீட்டருக்கும் அதிக வேகத்தில் வீசக்கூடும். குறித்த கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, இன்று காலை 8.30 வரையான கடந்த 24 மணித்தியாலங்களில், நுவரெலியா - எல்டன் தோட்டத்தில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. தொடர்ச்சியாக நிலவும் பலத்த காற்றுடன் கூடிய மழையுடனான வானிலையால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். பலத்த காற்றுடன் கூடிய மழையுடனான வானிலையினால் 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது. அனர்த்தங்களினால் மூவர் உயிரிழந்துள்ளதாக இரத்தினபுரி அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டது. அத்துடன், முகாமொன்றில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 106 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது. கடும் மழையினால் ஏற்பட்ட வௌ்ளத்தினால் மூழ்கிய பல பகுதிகளில் நீர் படிப்படியாக வழிந்தோடி வருகின்றது. குகுலே கங்கை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டமையால், குடா கங்கை பெருக்கெடுத்துள்ளது. இதனால் புலத்சிங்கள - மோல்காவ பிரதான வீதியின் சில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன், போக்குவரத்தின் பொருட்டு மக்கள் வள்ளங்களை பயன்படுத்துகின்றனர். கிங் கங்கை பெருக்கெடுத்துள்ளதால், பல வீதிகள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன. மின் உற்பத்தி நிலையங்களுக்கு அருகிலுள்ள நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் 56 வீதத்தால் உயர்வடைந்துள்ளது. அதற்கமைய, 31.7 வீதத்தில் நீர் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டது.

ஏனைய செய்திகள்